புதன்சந்தையில் மாடுகள் விற்பனை சூடுபிடித்தது தடையில்லா சான்று வழங்க கோரிக்கை

சேந்தமங்கலம் அருகே புதன்சந்தையில் தற்போது மாடுகள் விற்பனை சூடுபிடித்தது. இங்கு விற்பனையான மாடுகள் வாகனங்களில் கொண்டு செல்ல தடையில்லா சான்று வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2017-08-08 23:00 GMT
சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் அருகே மாடுகள் வாங்க, விற்க வியாபாரிகள் கூடும் இடமாக புதன்சந்தை விளங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பசுவதை தடை சட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து வெளிமாவட்டங்களுக்கு மாடுகள் விற்பனை செய்வது மிகவும் குறைந்ததால், சில மாதங்களாக அந்த சந்தை வெறிச்சோடி கிடந்தது.

அதைதொடர்ந்து அந்த தடை நீங்கியதால் கடந்த 2 வாரங்களாக புதன்சந்தை இயல்பு நிலைக்கு திரும்பி மாடுகள் விற்க, வாங்கும் நிகழ்வு சூடுபிடித்து உள்ளது. தற்போது வறட்சி நிலவுவதாலும், தீவன தட்டுப்பாட்டாலும் மாடுகளை அதிகளவில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சினையுடன் கூடிய பசுமாடு அல்லது எருமை மாடு போன்றவை இதுவரை ரூ.30 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.5 ஆயிரம் கூடுதலாக ரூ.35 ஆயிரத்திற்கு விற்கப்படுவதாக நேற்று சந்தைக்கு வந்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அந்த வியாபாரிகள் தெரிவித்ததாவது:-

புதன்சந்தையில் இருந்து விற்கப்பட்ட மாடுகள் வாகனங்களில் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லும்போது விலங்குகள் வாகன சோதனை நடத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடையில்லா சான்று கேட்கின்றனர். இல்லாவிடில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எனவே மாடுகள் கூடும் சந்தை அருகில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவர் மூலம் வியாபாரிகளுக்கு தடையில்லா சான்று வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்