சாலையின் மைய தடுப்புச்சுவரில் மொபட் மோதியதில் பிளஸ்-1 மாணவர் பலி

திருச்சியில் டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சாலையின் மைய தடுப்புச்சுவரில் மொபட் மோதியதில் பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-08-08 22:15 GMT
திருச்சி,

திருச்சி பொன்னகர் நியூ செல்வா நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். அடகு கடையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நிர்மலா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். மூத்த மகன் ஏற்கனவே இறந்து விட்டார். 2-வது மகன் விஜய்சஞ்சித் (வயது 17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து விஜய்சஞ்சித் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் நின்று கொண்டிருந்த தனது தாயின் மொபட்டை பெற்றோரிடம் கேட்காமல் எடுத்து கொண்டு தில்லைநகர் பகுதியில் உள்ள டியூசனுக்கு சென்றார்.

பின்னர் டியூசன் முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இரவு 8.45 மணியளவில் திருச்சி அண்ணா நகரில் இருந்து கோர்ட்டு அருகே எம்.ஜி.ஆர். சிலை சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அதிவேகமாக மொபட்டை ஓட்டியதால் நிலைதடுமாறி சாலையின் மைய தடுப்பு சுவரின் மீது மொபட் மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜய்சஞ்சித் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

ஹெல்மெட் வைத்திருந்தும் அணியவில்லை

இதனைக்கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த விஜய்சஞ்சித்தின் பெற்றோரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் விஜய்சஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். இதனால் மகனின் உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதது காண்போரையும் கண் கலங்க செய்தது.

இதையடுத்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று விஜய்சஞ்சத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன விஜய்சஞ்சித் ஹெல்மெட் வைத்திருந்தும், அணியாமல் மொபட்டிலேயே வைத்திருந்தார். ஹெல்மெட் போட்டிருந்தால் சிறிய காயங்களுடன் அவர் உயிர் தப்பியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்