சேத்துப்பட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சேத்துப்பட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் தாலுகா அலுவலகத்திற்குள் சென்று பானைகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2017-08-08 23:00 GMT
சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மணல் கொள்ளையை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சேத்துப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், எழில்மாறன், நகர செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் பசுமை வீடுகள் மற்றும் பாரத பிரதமர் வீடுகள் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களுக்கு வழங்கியதை கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்காததையும், செய்த வேலைக்கு ஊதியம் வழங்காததை கண்டித்தும், மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் தங்களுக்கு குடிநீர் வழங்காத ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து தங்கள் கையில் கொண்டு வந்த பானைகளை தடையை மீறி தாலுகா அலுவலக வளாகத்திலும், அலுவலகத்திற்கு உள்ளேயும் போட்டு உடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதில் பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் எம்.டி.மனோகரன், மாவட்ட துணை செயலாளர் பரமேஸ்வரிராஜ்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்