அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகர்கோவிலில் உள்ள அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

Update: 2017-08-08 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பு இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நேற்று அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்ட அவர் மருந்து இருப்பு பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

 ‘கோட்டார் அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சை முறைகள் சிறப்பாக உள்ளன. ஆனால் போதுமான மருந்துகள் இருப்பு இல்லை என்று புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சட்டசபையில் நான் கேள்வி எழுப்பினேன். அப்போது, அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரிக்கு ரூ.1 கோடி மதிப்பில் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தட்டுப்பாடு ஏதும் இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

நான் தற்போது நேரில் வந்து ஆய்வு செய்த போது, மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. ரூ.30 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு வந்த மருந்துகள் இந்த ஆண்டு ரூ.9 லட்சத்துக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. எனவே மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் தி.மு.க. சார்பில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

ஆய்வின்போது நகர செயலாளர் வக்கீல் மகேஷ், ஷேக் தாவூது, ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் கிளாரன்ஸ்டெவி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்