கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்

கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-08 23:00 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5–வது வார்டை சேர்ந்த மூஸ்லிம் நகரில் சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி. சாலையையொட்டி உள்ள இந்த பகுதியில் கடந்த 6 மாதங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தொடர்ந்து குடிநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் தங்களது பகுதியை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்வது இல்லை என்றும் முறையாக குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எதையும் எடுக்க வில்லை என்றும் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கக்கோரி இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை கும்மிடிப்பூண்டியின் முக்கிய சாலையான ஜி.என்.டி. சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ்சை அவர்கள் சிறை பிடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துராமலிங்கம் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கோபி, ரவி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் பிரச்சினை தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் பேசி தீர்வு காண்பதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலால் கும்மிடிப்பூண்டியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தை சேர்ந்தது வெங்காடு ஊராட்சி. இந்த ஊராட்சியில் வெங்காடு, கருணாகரச்சேரி, இரும்பேடு போன்ற கிராமங்கள் உள்ளன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கடந்த 6 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஸ்ரீபெரும்புதூர்– வெங்காடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

துறைசார்ந்த அரசு அதிகாரிகள் வரும் வரை கலைந்து செல்லமாட்டோம் என்று கூறினார்கள். இதனால் சிறிது நேரம் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்சி அலுவலர்கள் ரீமா ரோஸ், மங்கையர்ச்செல்வி ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். வட்டார வளர்ச்சி அலுலர்களை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து குழாயில் குடிநீர் வராததால் குளத்து நீரை பயன்படுத்துவதாக பொதுமக்கள் கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் பயன்படுத்தும் மாசு படிந்துள்ள குளத்தை அரசு அலுவலர்கள் பார்வையிட்டார்கள். விரைவில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தார்கள்.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். மறியல் காரணமாக அந்த பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்