சாலையில் உலா வந்த காட்டெருமையை செல்போனில் படம் எடுத்த சுற்றுலா பயணிகள் வனத்துறையினர் எச்சரிக்கை

குன்னூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வனப்பகுதியில் காட்டெருமைகள், வரையாடு போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

Update: 2017-08-08 21:45 GMT

குன்னூர்,

குன்னூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வனப்பகுதியில் காட்டெருமைகள், வரையாடு போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள ராணுவத்துக்கு சொந்தமான ஏரியில் படகு சவாரி நடக்கிறது. இதனால் அங்கு படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். இந்த ஏரி பகுதியில் இருந்து பிளாக் பிரிட்ஜ் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் காடு உள்ளது.

இந்த பகுதியில் மாலை நேரத்தில் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வழக்கம். எனவே வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று அங்கு புகைப்படங்களுடன் வனத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ராணுவ ஏரியில் இருந்து பிளாக் பிரிட்ஜ் வரும் சாலையில் காட்டெருமை ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணிகள் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி காட்டெருமையை செல்போனில் படம் எடுத்தனர். ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்