கழிவுநீர் உந்துநிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடிப்பு

ஈரோட்டில் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2017-08-08 22:30 GMT

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி 4–வது மண்டலம் 58–வது வார்டுக்கு உள்பட்ட கருங்கல்பாளையம் பொன்னுசாமிவீதியில் கழிவுநீர் உந்துநிலையம் (பம்பிங் ஸ்டே‌ஷன்) அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கு உந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பொன்னுசாமி வீதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்திற்கு அருகில் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நேற்று காலை தொடங்கியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் குழி தோண்டும் பணியை உடனடியாக நிறுத்தும்படி கூறினார்கள்.

அதன்பின்னர் பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

எங்கள் பகுதியில் உள்ள கழிப்பிடம் முறையாக கட்டப்படவில்லை. மேலும், கழிவுநீர் தொட்டி கட்டப்படாததால் கழிப்பிடத்தில் இருந்து வெளிவரும் கழிவுகள் நேரடியாக சாக்கடையில் கலக்கிறது. இதனால் பயங்கரமாக துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்தநிலையில் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்கப்பட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படும். ஆனால் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்க வேறு இடம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே கழிப்பிடத்தை சீரமைத்து கொடுத்துவிட்டு அமைத்துகொள்ளுங்கள் என்று கூறினோம். ஆனால் பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்காமல் கழிவுநீர் உந்துநிலையத்தை அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. இந்த பணியை கைவிட்டு கழிப்பிடத்தை சீரமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், கழிவுநீர் உந்துநிலையம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியை மூடிவிட்டனர். அதன்பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்