சித்தா, ஆயுர்வேத மருத்துவம் படித்து விட்டு அலோபதி சிகிச்சை அளித்த டாக்டர் கைது

சித்தா, ஆயுர்வேதம் படித்து விட்டு அலோபதி சிகிச்சை அளித்த டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-08 22:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தளி பகுதியில் பொதுமக்களுக்கு போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அங்கு சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் திருப்பூரில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியில் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் மட்டும் படித்து விட்டு ஒருவர் அலோபதி சிகிச்சை (ஆங்கில மருத்துவம்) அளிப்பதாக திருப்பூர் மத்திய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் பாரப்பாளையம் சூர்யாநகர் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஒருவர் அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாழையத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோலி (வயது 58). சித்தா, ஆயுர்வேத மருத்துவ படிப்பு படித்து முடித்துள்ளார். கடந்த 4 வருடங்களாக குடும்பத்துடன் இதே பகுதியில் வசித்து வந்துள்ளார். முதலில் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு சித்தா, ஆயுர்வேத சிகிச்சை மட்டும் அளித்து வந்துள்ளார்.

இதன் பின்னர் அலோபதி சிகிச்சையும் அளிக்க தொடங்கியுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக சம்பந்தப்பட அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதில் ஜோலி அலோபதி சிகிச்சை அளித்து உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்