பேரையூரில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வெளிநடப்பு

பேரையூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் வராததால், அவர்களை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2017-08-08 23:30 GMT

பேரையூர்,

பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருந்தது. இதில் பேரையூர் தாலுகாவிலுள்ள சேடபட்டி, டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய கிராமங்களை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் காலை 10 மணிக்கு வந்தனர். அவர்கள் கூட்டத்திற்கு அதிகாரிகள் வருவார்கள் என்று மதியம் 12 மணி வரை காத்திருந்தனர். அப்போது ஒரு சில துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மட்டுமே வந்திருந்தனர்.

கூட்டத்தை ஒருங்கிணைக்க கூடிய தாசில்தார் உதயசங்கர் வராத நிலையில், துணை தாசில்தார் செல்வராஜ் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்தநிலையில் சேடபட்டி, டி.கல்லுப்பட்டி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள், கால்நடை துறையினர், மின்சாரத்துறையினர், பயிர்காப்பீட்டு அதிகாரிகள், கூட்டுறவுத்துறையினர், புள்ளியல்துறையினர் உள்பட முக்கியத்துறையினர் மதியம் 12.30 மணி வரை வரவில்லை.

இதனால் ஆதங்கம் அடைந்த விவசாயிகள் துணைத்தாசில்தாரிடம் முறையிட்டனர். அவர் போனில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி வரக்கூறினார். வெகுநேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால், துணை தாசில்தாரிடம் தங்களது கண்டனத்தை தெரிவித்து விட்டு, கூட்டரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:– கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின்பேரில் இந்தக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். அதில் கலந்துகொள்ள வருவாய்த்துறை அழைப்பின் பேரில் ஏராளமான விவசாயிகள் இங்கு வந்துள்ளோம். ஆனால் சென்ற மாதம் போலவே, இந்த மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு அதிகாரிகள் வரவில்லை.

வறட்சி நிவாரணம், 100 நாள் வேலைத்திட்டம், பயிர்காப்பீடு வராதது குறித்தும், தற்போது மழை பெய்த நிலையில் என்ன பயிர்கள் பயிரிடலாம், மணல் திருட்டு நடைபெறுவது குறித்தும், கண்மாய் வண்டல் மண் செங்கல் காளவாசலுக்கு கொண்டு செல்வது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் விவாதிக்க வந்தோம். ஆனால் கடந்த 2 மாதமாக குறைதீர்க்கும் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாதது வேதனையளிக்கிறது. இதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு விவாசயிகள் பிரச்சினையை கேட்டு நடவடிக்கை வேண்டும். அடுத்த மாதமும் இதுபோன்று நடைபெற்றால் நாங்கள் சாலை மறியல் செய்து, எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம் என்றனர்.

உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. துணை தாசில்தார் ராஜூ தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்கள் மற்றும் வரத்துக்கால்வாய்களை து£ர்வாரி மழைகாலத்தில் மழை நீர் வீணாகமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உசிலம்பட்டியில் இருந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு செல்லும் அனைத்து பஸ்களையும் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகங்கள் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விவசாயிகள் குறைதீக்கும் நாள் கூட்டத்தில் சில அரசு அலுவலகங்களில் இருந்து அதிகாரிகள் வருவதில்லை இந்த நிலை தொடர்ந்தால் விவசாயிகளாகிய நாங்கள் இந்தக்கூட்டத்தை புறக்கணிக்க வேண்டிய நிலை வரும். எனவே எங்களின் குறைகளை கேட்க அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகள்