நாகர்கோவிலில் ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்றக்கோரி வழக்கு கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

நாகர்கோவிலில் நெடுஞ்சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை அகற்றக்கோரிய வழக்கில் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-08-08 23:15 GMT

மதுரை,

நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் மகேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து நாகர்கோவில் வடசேரி பகுதியில் எம்.ஜி.ஆர். சிலையின் அருகில் நெடுஞ்சாலையின் நடுவே கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் ஜெயலலிதாவின் உருவத்தை மணல் சிற்பமாக அமைத்தார். அந்த சிற்பமானது சுற்றிலும் தடுப்புகள் வைத்தும், கூரை அமைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாநில நெடுஞ்சாலையின் நடுவில் ஜெயலலிதா மணல் சிற்பம் அமைந்து உள்ளதால் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

எனவே மணல் சிற்பத்தை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த 22.2.2017 அன்று புகார் மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மனுவை பரிசீலித்து ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

பின்னர் இந்த வழக்கு குறித்து கன்னியாகுமரி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 28–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்