திருப்புவனத்தில் சாலையோரம் அமைக்கப்படும் வாரச்சந்தை கடைகளால் போக்குவரத்து நெருக்கடி
திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைக்கப்படும் வாரச்சந்தை கடைகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
திருப்புவனம்,
திருப்புவனம் பஸ் நிறுத்தம் அருகே பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை வளாகம் உள்ளது. இங்கு வாரத்தில் 2 நாட்கள் சந்தை நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை காய்கறி மற்றும் ஆடு, கோழி விற்பனை சந்தையும், புதன்கிழமை மாட்டு சந்தையும் நடைபெறும். இதில் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையில் சுமார் 200–க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் காய்கறி, பழங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இதில் சந்தை வளாகத்திற்குள் பெரிய வியாபாரிகள் கொட்டகை, பந்தல் அமைத்து பொருட்களை விற்பனை செய்கின்றனர். சிறு வியாபாரிகள் மதுரை–தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் கடைகள் அமைத்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சந்தை நாட்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
வாரச்சந்தை அருகே பஸ் நிறுத்தம் உள்ளதால் சிவகங்கை, மேலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள், பயணிகளை பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் 1 கி.மீ. முன்னதாக இறக்கிவிடுகின்றனர். காரணம் கேட்டால், வாரச்சந்தை நாட்களில் நகருக்குள் சென்று வரமுடியாது என்கிறார்கள் பஸ் டிரைவர்கள்.
மேலும் இந்த சாலை வழியாகவே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக செவ்வாய்க்கிழமை திரளான பக்தர்கள் செல்வார்கள். இதேபோல் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவும், அஸ்தி கரைப்பதற்காக ஏராளமானோர் வருவார்கள். அவ்வாறு வருவோர் கார், வேன்களில் வருகின்றனர். அவர்கள் வாரச்சந்தை எதிரே உள்ள பாதை வழியாக தான் வைகை ஆற்றிற்கு செல்ல வேண்டும். இதனால் வாரச்சந்தை நாட்களில் சாலையோரத்தில் அமைக்கப்படும் கடைகளால் அவர்கள் சிரமப்படுகின்றனர்.
வாரச்சந்தையில் பொருட்களை விற்பனை செய்ய வருவோர் சிறு வியாபாரிகள் காலையில் சாலையோரங்களில் கடைகள் அமைக்கின்றனர். பின்னர் மாலையில் தேசிய நெடுஞ்சாலையை மறைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன்காரணமாக வேலை முடிந்து வரும் அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள் மற்றும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக சந்தை அருகே செயல்படும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள், இப்பகுதி வழியாக செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சிறு வியாபாரிகள் சந்தை வளாகத்திற்குள் வைத்து பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.