மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை கணினி மயமாக்கும் நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்

ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின்கீழ் அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை கணினி மயமாக்கும் நடவடிக்கைகளை கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவகர் ஆய்வு செய்தார்.

Update: 2017-08-08 23:15 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை கணினி மயமாக்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையர் ஜவகர் கலந்து கொண்டு ஆய்வுசெய்தார்.

அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:– தமிழ்நாடு அரசு நிதி மேலாண்மை தொடர்பான அரசுப்பணிகள் திறம்பட நடைபெற மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப்பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப்பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, ரூ.288.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பல்வேறு துறைகளின்கீழ் சுமார் 9 லட்சம் அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் அனைத்து பணிப்பதிவேடுகளும் கணினி மயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் எளிமையான முறையில் உடனுக்குடன் பதிவு செய்ய வாய்ப்பாக அமையும்.

மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரத்து 108 அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் உள்ளன. இந்த பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதற்கான பணிகள் சம்பந்தப்பட்ட துறை தலைமை அலுவலர்கள் மூலம் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் 100 சதவீதம் நிறைவேற்றிடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குனர் (மின் ஆளுமை) மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கருவூலம் மற்றும் கணக்குத்துறை மண்டல இணை இயக்குனர் பாத்திமாசாந்தா, மாவட்ட கருவூல அலுவலர் கபீபு, நேர்முக உதவியாளர் (கருவூலக்கட்டுப்பாடு) புவியரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்