திருவாடானை பாரதிநகர் பகுதியில் வீதிகளில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

திருவாடானை பாரதிநகர் பகுதியில் வீதிகளில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதை உடனே சரிசெய்ய அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-08-08 21:45 GMT

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள பாரதிநகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் ஓடுவதற்கு வாறுகால் வசதி இல்லாததால் இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் வீதிகளில் ஆறாக ஓடுகிறது. மழை காலங்களில் மழைநீரும் கழிவுநீரும் ஒன்றாக கலந்து தொற்று நோய்களை பரப்பி வருகிறது. இதனால் காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்களால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இங்குள்ள நான்காம் வீதியில் மழைநீரும் கழிவுநீரும் கலந்து வீதியில் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சுகாதார துறை அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் உடனடியாக கழிவுநீரை அகற்றி தொற்றுநோய் தடுப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த வீதியில் குடியிருக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக மதுரை–தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிக்கு சுமார் 300 மீட்டர் தூரம் வந்து தான் தண்ணீர் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. காலை நேரங்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இந்த வீதியில் தெரு குழாய்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்