சுரண்டை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் இரவிலும் நீடித்ததால் போலீசார் குவிப்பு

சுரண்டை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். இரவிலும் நீடித்ததால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2017-08-08 21:00 GMT

சுரண்டை

சுரண்டை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். இரவிலும் நீடித்ததால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

டாஸ்மாக் கடைகள்

நெல்லை மாவட்டம் சுரண்டை, வீரகேரளம்புதூர், பரங்குன்றாபுரம் விலக்கு ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. கோர்ட்டு உத்தரவை அடுத்து அந்த கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் புதிதாக டாஸ்மாக் கடை அமைய போவதாக தகவல் பரவியது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டருக்கு மனுக்களை அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பரங்குன்றாபுரம்– கலிங்கப்பட்டி ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை திடீரென திறக்கப்பட்டது. இதை அறிந்த பரங்குன்றாபுரம், மருதுபுரம், மரியதாய்புரம், ராமனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மதியம் கடையின் முன்பு திரண்டனர். டாஸ்மாக் கடைக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பி, கடையின் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வீரகேரளம்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறிது நேரத்தில் டாஸ்மாக் கடையை ஊழியர்கள் மூடினர். இருப்பினும் இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. இரவில் மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் இருந்து கடையை அகற்றும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

பெண்கள் நடத்திய போராட்டத்துக்கு சுரண்டை வட்டார ம.தி.மு.க. செயலாளர் மருதச்சாமிபாண்டியன், நெல்லை மேற்கு மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம உதயசூரியன், பரங்குன்றாபுரம் அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் இரவிலும் போராடுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்