ஆறுமுகமங்கலம் சுடலைமாடசாமி கோவில் கொடை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆறுமுகமங்கலம் சுடலைமாடசாமி கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2017-08-08 21:00 GMT

ஏரல்,

ஆறுமுகமங்கலம் சுடலைமாடசாமி கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் கொடை விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் சுடலைமாடசாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான கோவில் கொடை விழா நேற்று நடந்தது. காலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மேளதாளம் முழங்க புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

மதியம் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், மதிய கொடையும் நடந்தது. மாலையில் மஞ்சள் பொங்கலிடப்பட்டது. இரவில் சாமக்கொடை, படையல் பூஜை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழி, பன்றிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர்.

சாமி தரிசனம்

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கோவில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் கூடாரம் அமைத்து குடும்பத்தினருடன் தங்கியிருந்து வழிபட்டனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

சிறப்பு பஸ்கள்

நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆறுமுகமங்கலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்