வாய்க்கு வந்தபடி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசக் கூடாது கவர்னருக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம்

அரசியல்வாதிகள் மீது வாய்க்கு வந்தபடி கவர்னர் கிரண்பெடி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசக்கூடாது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2017-08-07 22:59 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

துறைமுகம், சிறப்பு பொருளாதார மண்டலம் போன்றவை புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்களை நிறைவேற்ற 50 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமிக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்த திட்டங்களை மத்திய அரசு முடக்கியது.

தற்போது புதுவை துறைமுகத்தில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்ய சென்னை துறைமுக கழகத்துடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை அடுத்து அங்கு அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அப்போது ஏற்படும் சிறு, சிறு பிரச்சினைகளை சரி செய்வதை விட்டுவிட்டு, அதை கவர்னர் பூதாகாரமாக்கி வருகிறார்.

துறைமுக திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பார்கள். தூர்வாரும் பணிக்கான பணம் அரசியல்வாதிகளின் பாக்கெட்டிற்குள் செல்லும். எனவே துறைமுக திட்டம் பொன்முட்டையிடும் வாத்து என கவர்னர் கருத்து தெரிவித்துள்ளார். துறைமுக திட்டம் தொடர கூடாது என்ற எண்ணத்தில் இதை அவர் தெரிவித்துள்ளார்.

புதுவையில் துறைமுகம் தூர்வாரும் பணியில் மத்திய அரசு தான் செய்து வருகிறது. அப்படி இருக்க இதில் என்ன ஊழல் நடந்துள்ளது. எந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் கொள்ளை அடித்தார்கள் எனக்கூற முடியுமா?

புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த விமான சேவை தொடங்க இருப்பதிலும் தவறு நடைபெற இருந்ததாகவும், அதை தடுத்துள்ளேன். இல்லையென்றால் பல கோடி ஊழல் நடைபெற்று இருக்கும் என்று கவர்னர் கூறியுள்ளார். தவறு என தெரிந்து அதை மூடி மறைப்பது குற்றம். தவறை தடுக்காமல் இருப்பதும், உரிய நடவடிக்கை எடுக்காமல் விடுவதும் குற்றம்தான். முறைகேடுகள் தெரியவந்தால் அது குறித்து விசாரிக்க விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும். கவர்னர் தன் பதவிக்கு ஏற்ப மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட வேண்டும். அதைவிட்டு விட்டு வாய்க்கு வந்தபடி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்