சட்டசபை நோக்கி, உயர் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் ஊர்வலம்

7–வது ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி புதுவை சட்டசபை நோக்கி உயர் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2017-08-07 22:56 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில தன்னாட்சி உயர் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை தன்னாட்சி உயர் கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் அமல்படுத்தக்கோரி வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபை நோக்கி கண்டன ஊர்வலம் செல்வதாக அறிவித்தனர்.

அதன்படி புதுச்சேரி பொறியியல் கல்லூரி, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவம் மற்றும் விலங்குகள் அறிவியல் நிலையம், புதுச்சேரி மேல்நிலை தொழில்நுட்ப கல்வி நிறுவனம், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் புதுவை காமராஜர் சிலையில் இருந்து புதுவை சட்டசபை நோக்கி நேற்று மாலை கண்டன ஊர்வலம் சென்றனர்.

ஊர்வலத்திற்கு அமைப்பாளர் பரசுராமன் தலைமை தாங்கினார். புதுவை நேரு வீதி, மி‌ஷன் வீதி, செயின்ட் தான்ழ் வீதி வழியாக சட்டசபை நோக்கி சென்றது. இதில் ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும், கோ‌ஷங்கள் எழுப்பிய படியும் வந்தனர். அப்போது செயின்ட் தான்ழ் வீதியில் பெரியகடை போலீசார் தடுப்புகள் அமைத்து ஊர்வலத்தை நிறுத்தினார்கள்.

அதையடுத்து அவர்கள் அங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் சட்டசபை வளாகத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்ற அமைச்சர்கள், முதல்–அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்