ஓசூரில் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.7¾ லட்சம் தங்கம்–வெள்ளி கொள்ளை

ஓசூரில் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.7¾ லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2017-08-07 22:24 GMT

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ 9–வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 42). இவர் ஓசூர் சிப்காட்டில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 4–ந் தேதி ரமேஷ்பாபு குடும்பத்துடன் சொந்த ஊரான மேட்டூருக்கு சென்றார்.

நேற்று முன்தினம் மாலை ரமேஷ்பாபு ஓசூருக்கு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு திடுக்கிட்ட அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இரும்பு பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.70 ஆயிரம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. கொள்ளை போனவற்றின் மொத்த மதிப்பு ரூ.7¾ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ்பாபு இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசோமசுந்தரம் மற்றும் போலீசார், ரமேஷ்பாபு வீட்டிற்கு விரைந்து சென்றார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் அந்த வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டார்கள்.

ரமேஷ்பாபு வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அங்கு வந்து கைவரிசை காட்டி விட்டு சென்று உள்ளனர். இந்த கொள்ளையர்களை பிடிக்க ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசோமசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்