வருமான வரி அதிகாரிகள் முன்பு மந்திரி டி.கே.சிவக்குமார் ஆஜர்

சோதனையில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரி அதிகாரிகள் முன்பு மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

Update: 2017-08-07 22:14 GMT

பெங்களூரு,

சோதனையில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரி அதிகாரிகள் முன்பு மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 4 மணி நேரம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

கர்நாடகத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சித்தராமையாவின் மந்திரி சபையில் மின்சாரத்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். பெங்களூரு, டெல்லி, கனகபுரா, மைசூரு உள்பட இவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பங்குதாரர்கள் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 64 இடங்களில் வருமான வரி சோதனை கடந்த 2–ந் தேதி காலை 7 மணியளவில் தொடங்கியது. இந்த சோதனை கடந்த 5–ந் தேதி காலை 11 மணி வரை நடந்தது. இதில் ரூ.11.43 கோடி ரொக்கமும், ரூ.4.40 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர ரூ.300 கோடிக்கு சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பான சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த சோதனையின் போது மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். 4 நாட்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், நான் சட்டத்தை மதிப்பவன் என்றும் கூறினார். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். டி.கே.சிவக்குமாரை பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் காங்கிரஸ் தலைவர்கள், மந்திரிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரூ.300 கோடி சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு 7–ந் தேதி (அதாவது நேற்று) ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன்படி மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜரானார். அவருடன் நண்பரும், ஜோதிடருமான துவாரகநாத், கர்நாடக மேல்–சபை உறுப்பினர் ரவி ஆகியோரும் ஆஜராயினர்.

காலை 11 மணிக்கு அவர்கள் வருமான வரி அலுவலகத்திற்குள் சென்றனர். மதியம் 3 மணிக்கு அவர்கள் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். டி.கே.சிவக்குமாரிடம் 4 மணி நேரம் வருமானவரித் துறையினர் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரூ.300 கோடி சொத்துகள் தொடர்பாக டி.கே.சிவக்குமாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தார்.

இந்த விசாரணைக்கு பிறகு மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கு சம்மன் வழங்கினர். அதன்படி இன்று (அதாவது நேற்று) வருமான வரி அலுவலகத்தில் ஆஜரானேன். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். என்னை அதிகாரிகள் கவுரவமாக நடத்தினர். இந்த விசாரணை எனக்கு முழு திருப்தி அளித்தது. மீண்டும் விசாரணைக்கு வரும்படி என்னிடம் அதிகாரிகள் கூறவில்லை. தேவைப்பட்டால் அதுபற்றி தகவல் தெரிவிப்பதாக அவர்கள் கூறினர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்கும் ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்படும். எனது ஆடிட்டர் மூலம் இந்த ஆவணங்கள் அவர்களிடம் வழங்கப்படும். வருமான வரி சோதனையின் பின்னணியில் அரசியல் இருப்பதாக கூறப்படுவது பற்றி நான் கருத்து எதுவும் சொல்ல மாட்டேன். இந்த வி‌ஷயத்தில் நான் அமைதியாக இருந்து என்ன நடக்கிறது என்பதை கவனிக்கிறேன்.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று மந்திரி டி.கே.சிவக்குமார் ஆஜரானதையொட்டி ஏராளமான பத்திரிகையாளர்களும், ஊடகத்தினரும் கூடியிருந்தனர். இதனால் அந்தப் பகுதி நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

சிரித்த முகத்தோடு வந்த டி.கே.சிவக்குமார்

மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் கடந்த 2–ந்தேதி முதல் 5–ந்தேதி வரை வருமானவரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது பெங்களூரு சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் டி.கே.சிவக்குமார் வருமானவரித் துறையினரால், சிறை வைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவர் அவ்வப்போது தனது வீட்டின் வெளியே வந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்து கைக்கூப்பி வணங்கினார். அந்த சமயங்களில் அவர் சோகமாகவே காணப்பட்டார்.

ஆனால் நேற்று வருமானவரி துறை அதிகாரிகள் முன்பு ஆஜராக மந்திரி டி.கே.சிவக்குமார் காரில் வந்த போது சிரித்த முகத்தோடு வந்தார். அதேப் போல் விசாரணை முடிந்து வெளியே வந்து தனது வீட்டுக்கு அவர் புன்னகை ததும்ப காரில் சென்றார்.

மேலும் செய்திகள்