மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததன் பின்னணி என்ன?
மந்திரி டி.கே.சிவக்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததன் பின்னணி என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மின்சாரத்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். கர்நாடக அரசில் அதிகாரம் மிக்க மந்திரியாக வலம் வருகிறார். தேவேகவுடாவுக்கு அடுத்தபடியாக ஒக்கலிக சமுதாயத்தின் சக்தி வாய்ந்த தலைவராக அவர் விளங்குகிறார். அவர் கல்குவாரி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.கர்நாடகத்தில் 2013–ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அப்போது புதிய மந்திரிசபை பதவி ஏற்றபோது, டி.கே.சிவக்குமாருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. அவர் மீது ஊழல் புகார்கள் இருப்பதாக கூறி காங்கிரஸ் மேலிடம் அவரை மந்திரிசபையில் இருந்து தொலைவில் வைத்தது. முதல்–மந்திரி சித்தராமையாவும் டி.கே.சிவக்குமாரை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் டி.கே.சிவக்குமார் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி சில மாதங்கள் கழித்து மந்திரிசபையில் நுழைந்தார். அப்போது டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் மேலிடத்தில் இப்போது இருக்கும் அளவுக்கு செல்வாக்கு இல்லை என்றே சொல்லலாம். அதன் பிறகு பா.ஜனதாவை சேர்ந்த ரெட்டி சகோதரர்களின் கோட்டையாக கருதப்படும் பல்லாரியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா கோட்டையாக இருந்த அந்த தொகுதியில் ரெட்டி சகோதரர்களின் ஆதரவு இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்ற நிலை இருந்தது.இந்த சூழ்நிலையில் தான் பல்லாரி சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொறுப்பாளராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டார். அவருடைய மேற்பார்வையில் நடந்த இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல்லாரி தொகுதியில் வெற்றி பெற்றது. இது காங்கிரஸ் தலைவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு காங்கிரசில் டி.கே.சிவக்குமாரின் செல்வாக்கு உயர்ந்தது. காங்கிரஸ் மேலிடத்திற்கும் அவர் மீது இருக்கும் நம்பிக்கை மேலும் அதிகரித்தது.
அதன் பிறகு கேரளா, உத்தரகாண்ட் உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் சார்பில் பிரசாரத்திற்கு அழைக்கப்பட்டார். தற்போது சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் டி.கே.சிவக்குமாருக்கு அசைக்க முடியாத செல்வாக்கு இருக்கிறது. இதனால் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற டி.கே.சிவக்குமார் முயற்சி செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த பதவி அவருக்கு கிடைக்காமல் போனது. அவரை சமாதானப்படுத்தும் விதமாக அடுத்த ஆண்டு (2018) நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.டி.கே.சிவக்குமார் முதல்–மந்திரி பதவி மீதும் கண் வைத்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அந்த பதவிக்கான போட்டியில் அவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு மீது பெரிய அளவுக்கு ஊழல் புகார்கள் இல்லை. முதல்–மந்திரி சித்தராமையா உளவுத்துறை மூலம் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தினார். அதில் மக்களின் எண்ணங்கள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளதாக உளவுத்துறை அறிக்கை வழங்கியது. இது சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. இந்த தகவலை சித்தராமையாவே பல முறை கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்களில் மிகப்பெரிய அளவுக்கு வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு தொடர்புடைய 64 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனை கடந்த 2–ந் தேதி தொடங்கி 5–ந் தேதி வரை சுமார் 76 மணி நேரம் நீடித்தது. இவ்வளவு பெரிய அளவுக்கு வருமான வரி சோதனை நடந்தபோதும், டி.கே.சிவக்குமாருக்கு ஒட்டுமொத்த காங்கிரசும் பக்க பலமாக நின்றுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு உள்ள செல்வாக்கை குறைக்கவே மத்திய பா.ஜனதா அரசு வருமான வரி சோதனையை நடத்தி இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.