ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் 31 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

பெங்களூருவில் நேற்று லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் செட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

Update: 2017-08-07 22:05 GMT

பெங்களூரு,

ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் 31 பேர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் செட்டி நேற்று கூறினார்.

பெங்களூருவில் நேற்று லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் செட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கடந்த ஜனவரி மாதம் 28–ந் தேதி லோக் அயுக்தா நீதிபதியாக நான் பொறுப்பு ஏற்றேன். அப்போது, 6,500 புகார்கள் நிலுவையில் இருந்தன. நான் பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து லோக் அயுக்தாவுக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புகார்களின் உண்மை தன்மையின் அடிப்படையில் அதன் மீது விசாரணை நடத்தி லோக் அயுக்தா அதிகாரிகள் எனக்கு அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்கள். இதுவரை 32 அறிக்கைகள் வந்துள்ளன. இதில், 31 அறிக்கைகளை அரசுக்கு அனுப்பி உள்ளேன். இதன்மூலம் ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் 31 பேர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

ஊழல் தடுப்பு சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் லே£க்அயுக்தாவிடம் இல்லை. அந்த அதிகாரம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் சோதனை நடக்கலாம் என்ற பயம் அரசு அதிகாரிகளுக்கு இருக்கும். ஊழல் தடுப்பு சட்டத்தை பிரித்து ஊழல் தடுப்பு படை உருவாக்கப்பட்டு உள்ளது. இது லோக் அயுக்தாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்க லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். இதை செய்ய வேண்டும் என்று சண்டையிட மாட்டேன். இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழலை கட்டுப்படுத்துவேன்.

ஊழல் தடுப்பு படை, சி.ஐ.டி, சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி முறைகேடு, ஊழல்களை விசாரிக்கும் அதிகாரம் நமக்கு உள்ளது. லோக் அயுக்தாவில் போலீஸ் பிரிவு உள்ளது. இதை பயன்படுத்தி பணியாற்றி வருகிறேன். தற்போது ஊழல் புகார்கள், ஊழல் தடுப்பு படைக்கு மாற்றப்படுகிறது.

இந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒரு புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். மற்ற விசாரணை அமைப்புகளின் உதவிகளை பெற லோக் அயுக்தாவுக்கு உரிமை உள்ளது. இதை பயன்படுத்தி கொள்வேன்.

லோக் அயுக்தா அமைப்பை யாரும் தவறாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். அரசு அதிகாரிகளுக்கு ஊழல் தடுப்பு படை சரியானதாக இருக்கும். ஜூன் மாதம் 30–ந் தேதிக்குள் மக்கள் பிரதிநிதிகள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. பெரும்பாலானவர்கள் தாக்கல் செய்துள்ளனர். தாக்கல் செய்யாமல் உள்ள சிலருக்கு அதுபற்றி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும்.

கர்நாடக பா.ஜனதா தலைவர்களின் முறைகேடு புகார்களை மீண்டும் விசாரிப்பது தொடர்பாக முதல்–மந்திரி சித்தராமையா, லோக் அயுக்தா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் தவறானது. முதல்–மந்திரி சித்தராமையாவை நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நடந்த சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தான் நான் நேரடியாக பார்த்தேன்.

விசாரணையின்போது நான் மென்மையாக செயல்படுவதாக கேட்கிறீர்கள். பேச்சில் ஒருவரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்த நான் விரும்பவில்லை. ஊழல் அதிகாரிகளுக்கு எனது பேனா மூலம் விளக்கம் அளிக்கும்படி கடிதம் எழுதி தக்க பாடம் புகட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்