கர்நாடக– கோவா எல்லையில் 12–ந் தேதி போராட்டம்

மகதாயி குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி வருகிற 12–ந் தேதி, கர்நாடக– கோவா மாநில எல்லையில் போராட்டம் நடத்த உள்ளதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்து உள்ளார்.

Update: 2017-08-07 21:59 GMT

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் டவுன் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டு உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டு நேற்று முன்தினம் வாட்டாள் நாகராஜ் ஆய்வு நடத்தினார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தென் கர்நாடகத்தின் கடைகோடியில் உள்ள இந்த மாவட்ட வளர்ச்சியில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான அரசு அக்கறை காட்டுவதில்லை. ஆனால் இந்த மாவட்டத்திற்கு அவர் பலமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளதாக மக்களிடம் கூறிவருகிறார். மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது முக்கியம் அல்ல. மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது தான் முக்கியம்.

அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டின் போது சாம்ராஜநகர் மாவட்ட வளர்ச்சிக்காக ரூ.5 ஆயிரம் கோடி நிதியை மாநில அரசு தனியாக ஒதுக்கவேண்டும். மகதாயி குடிநீர் திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் வடகர்நாடக மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க முதல்–மந்திரி சித்தராமையா கோவா மாநில முதல்–மந்திரிக்கு கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லை. இந்த குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்ககோரி வருகிற 12–ந் தேதி கர்நாடக– கோவா எல்லையில் போராட்டம் நடத்த உள்ளோம்.

இதேபோல் மத்திய ரெயில்வே துறையும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தை புறக்கணித்து வருகின்றது. சாம்ராஜ்நகரில் இருந்து தமிழ்நாடு மேட்டுப்பாளையம் வரைக்கும், பெங்களூருவில் இருந்து கொள்ளேகால், சாம்ராஜ்நகர் வழியாக மேட்டூருக்கு ரெயில் இயக்க பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்தை மத்திய ரெயில்வே துறை கண்டு கொள்ளவில்லை.

கர்நாடக எம்.பி.க்களும் இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை. எனவே ரெயில்வே துறையை கண்டித்து வருகிற 13–ந் தேதி சாம்ராஜ்நகர் ரெயில்வே நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்