தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு 10 கிராம விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவாரூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க கோரி 10 கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-07 23:00 GMT
திருவாரூர்,

2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகை திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ.488.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திருவாரூர் அருகே தென்னவராயன்நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட குன்னியூர், கல்யாணசுந்தரபுரம், வேப்பத்தாங்குடி ஆகிய ஊராட்சியை சேர்ந்த ஓவிலிகுடி, மேலபாலையூர், கீழபாலையூர், மருவத்தூர், கழனிவாசல் உள்ளிட்ட 10 கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை அறிவிக்கப்படவில்லை. இதனை கண்டித்து கடந்த மாதம் 17-ந் தேதி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 15 நாட்களில் பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க கோரி திருவாரூர் தென்னவராயன்நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு 10 கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று மீண்டும் தொடர் காத்திருப்்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, தி.மு.க மாவட்ட பிரதிநிதி கருணாகரன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் இடும்பையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பயிர்க் காப்பீட்டு தொகை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்