மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை

தூத்துக்குடி அருகே மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2017-08-07 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள கீழசெக்காரக்குடியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 40). இவர் சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி முத்தழகி (38). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மனைவி மகராசி (30). இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடாசலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு சொந்த ஊரான கீழசெக்காரக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் சென்னை வேளச்சேரிக்கு சென்று விட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் இரவு வெங்கடாசலம் சென்னையில் இருந்து கீழசெக்காரக்குடி வந்து விட்டார். தனது 2-வது மனைவியின் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெங்கடாசலம் பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டு, மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது, வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்த மகராசி தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து உடனடியாக தூத்துக்குடி தட்டப்பாறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

பணிச்சுமை காரணமா?

வெங்கடாசலம் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்