அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவது இல்லை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

காஞ்சீபுரம் மாவட்டத்தின் சார்பில் வருகிற 30–ந் தேதி வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

Update: 2017-08-07 23:45 GMT

வண்டலூர்,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்கின்றனர். இதில் ஏழை–எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது

இதற்கான விழா மேடை அமைக்கும் பணிக்காக கால்கோள் விழா நேற்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீ.சீனிவாசன், டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, பா.பெஞ்சமின் ஆகியோர் தலைமை தாங்கி கால்கோளை நட்டனர். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, காஞ்சீபுரம் எம்.பி மரகதம் குமரவேல், மாவட்ட செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதைதொடர்ந்து செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி காஞ்சீபுரம் கிழக்கு, மத்திய, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.

இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ‘‘நீர் அடித்து நீர் விலகாது. இது நமது குடும்ப சண்டை. எல்லாம் சரியாகி விடும். அ.தி.மு.க.வின் 134 எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக இருப்போம். அரசின் செயல்பாடுகளுக்கு அரசு அதிகாரிகள் சிலர் ஒத்துழைப்பு தருவது இல்லை. ஆட்சி எப்போது கவிழுமோ? என்ற எண்ணத்திலேயே அவர்கள் பணியாற்றி வருகின்றனர்’’ என்றார்.

மேலும் செய்திகள்