நந்தம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

நந்தம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-07 22:30 GMT
ஆலந்தூர்,

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மெரினா கடற்கரை போன்ற பகுதிகளில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்துவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுபவர்களை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கிண்டியில் இருந்து போரூர் வரை மோட்டார் சைக்கிள் பந்தயம் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து நந்தம்பாக்கம் போலீசார் நடத்திய சோதனையில் கிண்டியில் இருந்து போரூர் வரை மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் சென்ற நந்தம்பாக்கம்் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்(வயது24), ரஞ்சீத்(28), நெய்வேலியை சேர்ந்த குணசந்திரன்(25), போரூரை சேர்ந்த ராஜசேகர்(18), ஆலந்தூரை சேர்ந்த அரவிந்த்(20), மணப்பாக்கத்தை சேர்ந்த ஜெயசந்திரன்(20) ஆகியோர் 4 மோட்டார் சைக்கிள்களில் பந்தயத்திற்காக வேகமாக சென்றதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நந்தம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* சென்னை தரமணியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான தண்டபாணி(31) அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மோதி பலியானார்.

* தரமணியை சேர்ந்த நடேசன் (63) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம மனிதர்கள் அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர்.

* மேடவாக்கத்தை சேர்ந்த ராமன்(45) வேளச்சேரி தண்டீஸ்வரன் நகர் பூங்காவில் பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.

* வியாசர்பாடி பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் போஸ்(62) நேற்று கடையில் கியாஸ் சிலிண்டரை மாற்றும்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டது.

* தண்டையார்பேட்டை பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 சிறுவர்களை ரோந்து போலீசார் கைது செய்தனர்.


* சென்னை கே.கே.நகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஸ்ரீராம்(21) நேற்று முன்தினம் இரவு தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது சாலை தடுப்பில் வாகனம் மோதியதில் காயம் அடைந்த, அவர் ஆஸ்பத்திரியில் இறந்தார்.

* புதுபெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த விசாலாட்சி (85) நேற்று காலை கோவிலுக்கு சென்றபோது அந்த வழியாக வந்த மினிவேன் மோதியதில் இறந்தார். மினி வேன் டிரைவர் துரைகுட்டி(32) கைதானார்.

* வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியில் உள்ள மகிமைராஜ்(38) என்பவரது வீட்டில் சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு தடை செய்யப்பட்ட மாவா, குட்கா தயார் செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

* தனியார் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த மிசோராம் மாநிலத்தை சேர்ந்த கிங்சுபாங்கி(24) நேற்று கிண்டியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் செய்திகள்