அரசின் மணல் இணைய சேவையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் சிறப்பு முகாம்

தமிழக அரசின் மணல் இணைய சேவையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஆவணங்களை சரிபார்க்கும் சிறப்பு முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார். விருதுநகரில் 11–ந் தேதி வரை இந்த முகாம் நடக்கிறது.

Update: 2017-08-07 23:15 GMT

விருதுநகர்,

விருதுநகர், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இல்ல வளாகத்தில் தமிழ்நாடு அரசின் மணல் இணைய சேவையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் சிறப்பு முகாமினை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:–

 தமிழ்நாடு அரசின் மணல் இணைய சேவையில் மேற்கொள்ளப்படும் வாகனப் பதிவுகளில் எழும் முறைகேடான பதிவுகளை தவிர்க்கும் பொருட்டு அரசின் மணல் இணைய சேவையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்த்தலுக்கான சிறப்பு முகாம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறுகிறது.

நமது மாவட்டத்தில் இச்சிறப்பு முகாம் விருதுநகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரி எதிரில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இல்ல வளாகத்தில் வருகிற 11–ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. வாகன உரிமையாளர்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் வாகனத்தின் நடப்பிலுள்ள வாகன பதிவு புத்தக விவரம், வாகன அனுமதிச் சான்று, வாகன தகுதிச் சான்று, சாலை வரி ரசீது மற்றும் காப்பீடு விவரங்கள் ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்து, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் படிவத்துடன் முகாமிற்கு வரவேண்டும். பதிவேற்றிய ஆவணங்களுக்கான அசல் சான்றுகளை அவற்றுக்கான நகல்களுடன் சிறப்பு முகாமில் காண்பித்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த முகாம்வாகனத் தரவுகளை ஒழுங்குபடுத்த நடைபெறுகிறது. முகாமிற்கு வாகனங்களை கொண்டு வர வேண்டாம். முகாமில் ஆவணங்கள் சரிபார்ப்பு மேற்கொள்ளும் வாகனங்கள் மட்டுமே இணையதள மணல் சேவையினை பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், தவறான ஆவணங்கள் கொண்ட வாகனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு 94436 10888 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் அந்தோணிதுரை, உதவி செயற்பொறியாளர் பவளக்கண்ணன் உள்பட அரசு அலுவலர்கள், லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்