மாங்காடு அருகே மனைவியின் கள்ளக்காதலனால் கொல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு
மாங்காடு அருகே மனைவியின் கள்ளக்காதலனால் கொல்லப்பட்ட வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர்.
பூந்தமல்லி,
மாங்காடு அடுத்த முகலிவாக்கம், மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 29). இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி நதியா (23). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
அன்பழகனை கடந்த 17.3.2017 முதல் காணவில்லை எனக்கூறி மாங்காடு போலீஸ் நிலையத்தில் கடந்த 29.3.2017–ல் நதியா புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் கடந்த 4 மாதங்களாக அன்பழகனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தனது மகன் காணாமல் போனதில் இருந்து நதியாவின் வீட்டுக்கு அவரது தாய் மாமா நாகராஜன் வந்து செல்வதாகவும் இதனால் நதியா மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், அன்பழகனின் தந்தை சந்திரன் போலீசாரிடம் கூறினார். எனவே மாங்காடு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
இதில் நதியாவின் செல்போனுக்கு கடந்த 4 மாதங்களாக அதிக அளவில் பேசியவர்கள் யார்? என சோதனை செய்யப்பட்டது. அப்போது நாகராஜன்தான் அதிகளவில் பேசியது தெரியவந்தது. மேலும் அன்பழகன் காணாமல் போன நாளில் அவருடன் நாகராஜன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாகராஜன், நதியா ஆகிய இரண்டு பேரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நாகராஜனுடன் கள்ளக்காதல் இருந்ததை நதியா ஒப்புக்கொண்டார். மேலும் குடிப்பழக்கம் உடைய அன்பழகன் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை துன்புறுத்தியதால், நாகராஜன் மூலம் அவரை தீர்த்துக்கட்டியதாகவும் போலீசாரிடம் நதியா தெரிவித்தார்.
அன்பழகனை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்ற நாகராஜன், அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை அங்கேயே புதைத்து விட்டு வந்துள்ளார். பின்னர் அன்பழகனை காணவில்லை என போலீசில் புகார் அளித்து அவர்கள் நாடகமாடியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து நாகராஜன் மற்றும் நதியாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அன்பழகனின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட நாகராஜனை மாங்காடு போலீசார் வந்தவாசி மலைப்பகுதிக்கு நேற்று அழைத்து சென்றனர். அங்கு அவர் அன்பழகனின் உடலை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார்.
பின்னர் அன்பழகனின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. அழுகிய நிலையில் எலும்புக்கூடாக இருந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட நதியா மற்றும் கள்ளக்காதலன் நாகராஜன் ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.