மனு கொடுக்க வருபவர்கள் தீக்குளிக்க முயற்சிப்பதால் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த சோதனை

மனு கொடுக்க வருபவர்கள் தீக்குளிக்க முயற்சிப்பதால் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த சோதனைக்கு பின்னரே பொதுமக்களுக்கு அனுமதி

Update: 2017-08-07 23:00 GMT

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகம் முன் அடிக்கடி தீக்குளிப்பு முயற்சி சம்பவங்கள் நடைபெறுதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் பலத்த சோதனைக்கு பின்னரே கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த அமைப்புகள், கட்சிகள், சங்கங்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். இந்த குறைதீர்க்கும் கூட்டத்தின் போது சிலர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

கடந்த 2 வாரத்துக்கு முன்பு சூலூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 18 பேர் பட்டா கேட்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். கடந்த வாரம் 4 குழந்தைகளுடன் தந்தை தீக்குளிக்க முயன்றார். இந்த தொடர் சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. அடிக்கடி தீக்குளிப்பு முயற்சி சம்பவங்கள் நடைபெறுவதை தொடர்ந்து, குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் நாட்களில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

இதன்படி நேற்று 15–க்கும் மேற்பட்ட போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பெண்கள், விவசாயிகள், முதியவர்கள், அவர்கள் கொண்டு வரும் பைகள், குடிநீர் பாட்டில்கள் என அனைத்தையும் சோதனை செய்தனர்.

மேலும் கலெக்டர் அலுவலக ஊழியர்களின் அடையாள அட்டைகளை சரிபார்த்த பின்னரே போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். பொதுமக்களின் வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்பட்டது. இதுதவிர யாராவது தீக்குளித்தால் அதனை அணைப்பதற்காக 2 குடங்களில் தண்ணீர் மற்றும் மணல் மூட்டைகளையும் போலீசார் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க கோரி கண்களில் கருப்பு துணி கட்டியபடியும், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடியும் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்ட போலீசார், அங்கு அமரக்கூடாது கலெக்டரிடம் சென்று மனு அளிக்கும்படி தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 40 அருந்ததியர் குடும்பங்கள் குடியிருந்து வருகின்றோம். எங்களுக்கு நடைபாதை, குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கி, மின்சார வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ விஸ்வபிரம்ப ஜெயந்தி விழா கமிட்டியினர் கலெக்டரிடம் அளித்த மனுவில், விஸ்வகர்மா சமுதாயமானது ஆண்டு தோறும் ஆவணி அவிட்டம் அன்று பூணூல் அணியும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதனை அவமதிக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பன்றிக்கு பூணூல் அணிவிக்க போவதாக அறிவித்து உள்ளனர். எனவே இந்த அமைப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்