கோடநாடு கொலை வழக்கில் ஒருவருக்கு நிபந்தனை ஜாமீன்

கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோத்தகிரி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-08-08 00:30 GMT

கோத்தகிரி,

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாலை 11 பேர் கொண்ட கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொன்றது. மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரை தாக்கிவிட்டு எஸ்டேட் பங்களாவுக்குள் புகுந்து பொருட்களையும், ஆவணங்களையும் கொள்ளையடித்துவிட்டு தப்பியது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டது தெரியவந்தது. இவரை போலீசார் தேடிவந்த நிலையில் ஆத்தூரில் நடந்த விபத்தில் அவர் பலியானார்.

இதேபோல் 2–வது முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சயனும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்கு பின் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, சதீசன், குட்டி பிஜின், உதயகுமார், வாளையாரை சேர்ந்த மனோஜ் சாமியார், ஜித்தின் ராய், ஜம்ஷீர் அலி, சந்தோஷ் சாமி, வயநாடு மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஜித்தின் ராய், ஜம்ஷீர் அலி ஆகியோர் கோடநாடு சம்பவத்துக்காக கேரள மாநிலத்தில் இருந்து தங்களது பெயரில் காரை வாடகைக்கு எடுத்து வந்து மோசடி செய்த வழக்கில் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

திபு, சதீசன், குட்டி பிஜின், உதயகுமார், வாளையார் மனோஜ் சாமியார், சந்தோஷ் சாமி, வயநாடு மனோஜ் மற்றும் சயன் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் திபு, சதீசன், குட்டி பிஜின், உதயகுமார், வாளையார் மனோஜ் சாமியார் ஆகிய 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் உள்ள சந்தோஷ் சாமி, வயநாடு மனோஜ் ஆகியோர் சார்பில் ஜாமீன் வழங்கக்கோரி கடந்த ஜூலை மாதம் 28–ந் தேதி ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, வயநாடு மனோஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததுடன், சந்தோஷ் சாமிக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை தினமும் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு கோத்தகிரி கோர்ட்டில் நடைபெற்று வருவதால் சந்தோஷ் சாமியின் ஜாமீன் மனு மீதான விசாரணை கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தோஷ் சாமிக்கு கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதற்கிடையே கோவை சிறையில் உள்ள சயன், திபு, சதீசன், குட்டி பிஜின், உதயகுமார், வாளையார் மனோஜ் சாமியார் ஆகியோரின் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால் அவர்கள் 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 21–ந் தேதி வரை அவர்கள் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

சந்தோஷ் சாமிக்கு வழக்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் உத்தரவு கோவை மத்திய சிறைக்கு சென்றதும் அவர் ஜாமீனில் வெளியே வருவார். அவர் கோத்தகிரியில் தங்கியிருந்து போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்.

மேலும் செய்திகள்