கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த விலையில் வைக்கோல் தி.மு.க. கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த விலையில் வைக்கோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு, தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2017-08-07 22:30 GMT

காரைக்குடி,

இளையான்குடி ஒன்றிய தி.மு.க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.யுமான சுப.மதியரசன் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவில் பருவமழை பெய்யாததால் பல்வேறு இடங்களில் விவசாயம் பொய்த்து, விவசாயிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இளையான்குடி ஒன்றியத்தில் இந்த நிலை இன்னும் மோசமானதாக உள்ளது. இப்பகுதியில் போதிய மழையில்லாத காரணத்தினால் விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிர் சாகுபடி செய்யவில்லை. இன்னும் சில விவசாயிகள் எப்படியாவது பருவமழை பெய்து விடும் என்ற நம்பிக்கையில் பயிர் சாகுபடி செய்தனர். ஆனால் அவர்களை வஞ்சிக்கும் வகையில் பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதனால் அவர்கள் பயிரிட்ட பயிர்கள் தண்ணீரின்றி முற்றிலும் கருகிவிட்டன. விவசாயம் மனிதர்களுக்கு பயன்படாமல் போனது மட்டும் அல்லாமல், விவசாயிகள் தங்களின் வீடுகளில் வளர்த்து வரும் ஆடு, மாடுகளின் தீவனத்திற்கும் கூட பயன்பாடாமல் போய்விட்டது.

கடந்த காலங்களில் அரசின் சார்பில் வைக்கோல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டன. ஆனால் நாளடைவில் வெறு நிகழ்ச்சியாகவே மட்டுமே அரங்கேறியுள்ளது. கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வைக்கோல் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு அளிப்பது மட்டுமல்லாமல், தன்னுடன் இன்னொரு பிறவியாக பாவித்து வரும் மாடுகள், காளைகள் ஆகியவற்றிக்கு வைக்கோல் வாங்க முடியாத நிலை இருந்து வருகிறது.

எனவே மாவட்ட கலெக்டர், கால்நடைகள் வளர்ப்போருக்கு குறைந்த விலையில் வைக்கோல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்