சென்னை விமான நிலையத்தில் குரங்கு புகுந்ததால் பரபரப்பு பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

சென்னை விமான நிலையத்தில் குரங்கு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

Update: 2017-08-06 22:00 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலைய புறப்பாடு முனையத்தில் நேற்று காலை ஒரு குரங்கு திடீரென முன்பக்க வழியாக உள்ளே புகுந்து விட்டது. மேற்கூரை வழியாக பயணிகள் சோதனை செய்யும் பகுதியின் மேல் தளத்தில் அந்த குரங்கு அங்கும் இங்குமாக சுற்றிக்கொண்டு இருந்தது.

உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் உள்ள 1 மற்றும் 2–வது நுழைவு பகுதியில் அந்த குரங்கு மாறி மாறி சுற்றியதால் விமானத்தில் ஏற வந்த பயணிகள், அதிர்ச்சி அடைந்தனர். பயணிகள் இருந்த பகுதிக்கும் சென்ற குரங்கு, மேற்கூரையில் இருந்து கீழே இறங்கி வந்து மீண்டும் மேலே சென்ற வண்ணம் இருந்ததால் அதை கண்டு பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய ஊழியர்கள், விமான நிலைய தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து அந்த குரங்கை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த குரங்கு, அவர்களிடம் சிக்காமல் மேற்கூரையில் தாவி குதித்து அங்கும் இங்குமாக ஓடி ஆட்டம் காட்டியது.

இதுபற்றி கிண்டி வனத்துறைக்கு தகவல் தரப்பட்டது. கிண்டி வனத்துறை சரகர் முருகேசன் தலைமையில் வனத்துறை அதிகாரி ஆத்மராமன் மற்றும் ஊழியர்கள் விமான நிலையத்துக்கு விரைந்து சென்றனர்.

விமான நிலையத்தில் புகுந்த குரங்கை பிடிக்க ஒரு கூண்டை கொண்டு வந்து வைத்தனர். அதில் பழங்கள், பிஸ்கெட் ஆகியவை வைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் அந்த குரங்கு கீழே இறங்கி வந்து கூண்டுக்குள் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட கூண்டுக்குள் வந்தது. உடனடியாக வனத்துறையினர் கூண்டை அடைத்து குரங்கை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட குரங்கை வனத்துறை அலுவலகத்துக்கு கூண்டுடன் கொண்டு சென்றனர்.

இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் குரங்குகள் புகுந்தபோது வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

காலை 8 மணியில் இருந்து பகல் 1 மணி வரை சுமார் 5 மணி நேரம் போக்கு காட்டிய குரங்கை, வனத்துறையினர் லாவகமாக பிடித்த பின்னரே விமான நிலையம் வந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்