கணவரை கொலை செய்து விட்டு மாயமானதாக நாடகம் ஆடிய பெண் கள்ளக்காதலனுடன் கைது
கணவரை கொலை செய்து விட்டு மாயமானதாக நாடகம் ஆடிய பெண், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த முகலிவாக்கம், மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்(வயது 29). இவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நதியா(23). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 29–3–2017 அன்று மாங்காடு போலீஸ் நிலையத்தில் நதியா ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர், தனது கணவரை 17–3–2017 முதல் காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி கோரி இருந்தார்.
‘‘கணவர் மாயமாகி இவ்வளவு நாட்கள் கழித்து எதற்காக புகார் அளிக்கிறீர்கள்?’’ என்று போலீசார் சந்தேகத்துடன் கேட்டனர். அதற்கு நதியா, ‘‘எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் குடிபோதையில் உறவினர் வீடுகளுக்கு சென்று தங்கி இருப்பார்’’ என்று நினைத்து இருந்ததாகவும், அதனால் தற்போது புகார் செய்வதாகவும் கூறினார்.
அந்த புகாரின்பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அன்பழகனை கடந்த 4 மாதங்களாக தேடி வந்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அன்பழகனின் தந்தை சந்திரன், மாங்காடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர், ‘‘எனது மகன் காணாமல் போன நாள் முதல் மருமகள் நதியா வீட்டுக்கு அவருடைய தாய்மாமா நாகராஜன் அடிக்கடி வந்து செல்கிறார். அதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதுபற்றி அவரிடம் விசாரிக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.
இதையடுத்து போரூர் உதவி கமிஷனர் கண்ணன், மாங்காடு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். முதலில் நதியாவின் செல்போன் எண்ணுக்கு கடந்த 4 மாதங்களாக அதிக அளவில் யார் பேசி உள்ளார்கள்? என்று சோதனை செய்தனர்.
அதில் அவருடைய தாய் மாமா நாகராஜன்தான் அதிக அளவில் நதியாவுடன் செல்போனில் பேசி இருப்பதும், அடிக்கடி அவர், நதியா வீட்டுக்கு வந்து செல்வதும் தெரியவந்தது. கடைசியாக அன்பழகன் மாயமான நாளில் அவருடன் நாகராஜன்தான் உடன் இருந்தார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து நாகராஜன், நதியா 2 பேரையும் பிடித்து போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். அதில் நதியா, கணவர் அன்பழகனை கொலை செய்து விட்டு அவர் மாயமானதாக நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார்.
நாகராஜன், நதியா இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:–
வேலூரை சேர்ந்தவர் நாகராஜன்(23). பெங்களூருவில் வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. நதியாவுக்கு தாய்மாமன். நதியாவின் திருமணத்துக்கு முன்பே இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
அன்பழகனுடன் திருமணம் ஆன பிறகும் நதியா, தாய்மாமா நாகராஜனுடன் கள்ளக்காதலை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. அன்பழகன் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி வீட்டுக்கு வந்து நதியாவுடன் நாகராஜன் உல்லாசமாக இருந்து விட்டு சென்று வந்தார்.
இதுபற்றி அன்பழகனிடம் அக்கம் பக்கத்தினர் அரசல், புரசலாக தெரிவித்து உள்ளனர். ஆனால் நதியாவுக்கு நாகராஜன் தாய்மாமா என்பதால் அதுபோல் இருவருக்கும் தவறான உறவு இருக்க வாய்ப்பு இல்லை என்று மனைவி மற்றும் நாகராஜன் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அதை அன்பழகன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது அவர்கள் இருவருக்கும் சாதகமாக அமைந்து விட்டது.
அன்பழகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வதுடன், அவரை அடித்து, உதைத்து வந்து உள்ளார். அப்போது நாகராஜன்தான் நதியாவுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்து வந்து உள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த நதியா, ‘‘இனிமேலும் எனது கணவருடன் என்னால் சேர்ந்து வாழ முடியாது. அவரை கொலை செய்து விட்டால் நாம் நிம்மதியாக வாழலாம்’’ என்று நாகராஜனுக்கு யோசனை கூறினார்.
அதன்படி சம்பவத்தன்று அன்பழகன் வீட்டுக்கு வந்த நாகராஜன், எங்காவது வெளியே சென்று விட்டு வரலாம் என்று கூறி அவரை வந்தவாசிக்கு அழைத்துச் சென்றார். அங்கு மது வாங்கி கொண்டு இருவரும் அருகில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் வைத்து அன்பழகனுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்தார்.
அதை வாங்கி குடித்த அவருக்கு போதை தலைக்கேறியது. உடனே நாகராஜன், அன்பழகனை பலமாக தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் தான் தயார் நிலையில் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அன்பழகனின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்.
அங்கேயே சிறிய அளவில் பள்ளம் தோண்டி உடலை புதைத்து, அதன் மீது கற்களை வைத்து விட்டு எதுவும் தெரியாதது போல் திரும்பி வந்து விட்டார்.
உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க கணவரை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கும்படி நாகராஜன் அளித்த யோசனையின் பேரிலேயே 12 நாட்களுக்கு பிறகு போலீசில் நதியா புகார் அளித்து உள்ளார்.
முன்னதாக அன்பழகனை எங்கு வைத்து கொலை செய்யலாம் என்று முன்கூட்டியே நாகராஜன், வந்தவாசிக்கு சென்று அந்த மலைப்பகுதியில் இடத்தை தேர்வு செய்து வைத்து விட்டு பின்னர் தனது கொலை திட்டத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கணவரை கொலை செய்து விட்டு மாயமானதாக நாடகம் ஆடிய மனைவி நதியா, அவருடைய கள்ளக்காதலனான தாய் மாமா நாகராஜன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அன்பழகனின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட நாகராஜனை, மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று உள்ளனர். தந்தையை இழந்து, தாயும் கைது செய்யப்பட்டு விட்டதால் அவர்களின் 2 மகள்களும் அனாதையாக தாத்தா சந்திரன் வீட்டில் தவித்து வருவதை பார்க்க பரிதாபமாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.