சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை: இணை கமிஷனர் மனோகரன் எச்சரிக்கை

சென்னையில் சங்கிலி பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணை கமிஷனர் (கிழக்கு மண்டலம்) மனோகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2017-08-07 01:45 GMT
சென்னை,

சென்னை நகரில் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக டெல்லியைச் சேர்ந்த சஞ்சய் (வயது 42), சந்தீப் (30) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சங்கிலி பறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது. கைதானவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் டெல்லியைச் சேர்ந்த முரளிதர், சாகர் உள்ளிட்ட மேலும் 3 பேரை தேடி வருகிறோம். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி சென்றுள்ளனர்.

இந்த சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து இங்குள்ள லாட்ஜிகளில் தங்கி இருந்து நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள பழைய மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் இருந்து பழைய மோட்டார் சைக்கிள்களை விலைக்கு வாங்கி கொள்ளைச் சம்பவங் களில் ஈடுபட பயன்படுத்தி இருக்கிறார்கள். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் 2 கொள்ளையர்களையும் பிடிக்க பெரிதும் உதவிகரமாக இருந்தது.

இந்த கொள்ளையர்கள் மிகவும் கொடூரமானவர்கள் ஆவார்கள். இவர்கள் மீது டெல்லியில் 35 வழக்குகள் உள்ளன. சென்னையில் மட்டும் இவர்கள் மீது 23 வழக்குகள் உள்ளது. ஆக்ரா, கொச்சி போன்ற நகரங்களிலும் இவர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கிழக்கு மண்டலத்தில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் ஆகிய துணை கமிஷனர்கள் சரக எல்லைப்பகுதியில் 3 ஆயிரம் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தப்பட்டுள்ளது.

சங்கிலி பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 24 மணி நேரமும் போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்தவுடன் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக செல்போன் பறிப்பு சம்பவங்களையும் சாதாரணமாக கருதாமல், நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன், வேப்பேரி உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம், இன்ஸ்பெக்டர்கள் சிதம்பர முருகேசன், சித்தார்த்த சங்கர்ராய் ஆகியோர் உடன் இருந்தனர்.

சென்னையில் தற்போது சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட டெல்லி கொள்ளையர்கள் கொள்ளையடித்த நகைகளை விற்று கிடைத்த பணத்தில் டெல்லியில் மங்கள்புரி என்ற இடத்தில் பல அடுக்குமாடி வீடுகளை கட்டி சொகுசாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் சென்னையில் வாடகை கார் ஒன்றையும், டிரைவரை தாக்கிவிட்டு, கடத்திச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்க பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்களை இவர்கள் உடனுக்குடன் மாற்றிவிடுவார்கள். கொள்ளை வேட்டை முடிந்தவுடன் தாங்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளை ரெயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி விடுவார்கள். இதுபோல் மிகவும் சாமர்த்தியமாக கொள்ளையடித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்