லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
காஞ்சீபுரம் மாவட்டம் இள்ளலூர் கோவில் தெருவை சேர்ந்தவர் பூபதி.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த இள்ளலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 28). இவர் 6 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் அவர் மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு நண்பர் தாமரைகண்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
இள்ளலூர் கூட்ரோடு அருகே செல்லும்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி பூபதியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த பூபதி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தாமரைகண்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.