மாவட்டம் முழுவதும் குரூப்–2 தேர்வை 18,151 பேர் எழுதினர்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–2 தேர்வை 18,151 பேர் எழுதினர்.

Update: 2017-08-06 22:45 GMT

நாமக்கல்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்–2 பிரிவில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டி தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு தாலுகாக்களில் 79 மையங்களில் நேற்று நடைபெற்றது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையக்குழு உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கலெக்டர் ஆசியா மரியம் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 23,365 தேர்வர்கள் இத்தேர்வினை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 5,214 தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை. 18,151 தேர்வர்கள் மட்டுமே இத்தேர்வினை எழுதினர்.

இத்தேர்வு பணியில் 79 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் 79 ஆய்வு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் இப்பணிக்காக துணை கலெக்டர், துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் நிலையில் 11 பறக்கும் படை அலுவலர்களும், துணை தாசில்தார் தலைமையில் 16 நடமாடும் குழுவினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற மின் சாதன பொருட்கள் எதையும் கொண்டு வர அனுமதி இல்லை. இத்தேர்வு மையங்களில் குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன. திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி மற்றும் கே.எஸ்.ஆர் கல்லூரி ஆகிய 2 தேர்வு மையங்களிலும் 1000–க்கும் மேற்பட்ட தேர்வர்கள் இத்தேர்வினை எழுதுவதால் அத்தேர்வு மையங்களுக்கு கூடுதலாக வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதோடு, வெப்–கேமரா மூலம் அந்த மையங்கள் ஆன்–லைனில் கண்காணிக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் உதவி கலெக்டர் ராஜசேகரன், தாசில்தார் ராஜகோபால் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்