குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைப்பதை தடுக்க வேண்டும் டி.ஜி.பி.யிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்

குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைப்பதை தடுக்கவேண்டும் என்று டி.ஜி.பி. சுனில்குமார் கவுதமிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Update: 2017-08-06 22:30 GMT

திருபுவனை,

புதுவை மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, அதை சரிசெய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் திருபுவனை போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வழக்குகளின் பதிவேடுகள், குற்றவாளிகளின் புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும் கோர்ட்டில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளின் நிலை குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். குற்றசெயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு ஆலோசனை கூறினார்.

இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பை பார்வையிட்ட டி.ஜி.பி., அதனை சீரமைக்க கோப்புகள் தயார் செய்து அனுப்புமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் குறைகேட்டார். அப்போது, குடியிருப்பு மற்றும் போலீஸ் நிலையம் பகுதியில் மதுக்கடைகள் திறப்பதை தடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

கிராமப்புறங்களில் குற்றங்கள் நடந்தால் உடனே போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கவேண்டும். சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தாலும் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கவேண்டும் என்று டி.ஜி.பி.சுனில்குமார் கவுதம் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்–இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்