மோட்டார் சைக்கிள் – டிப்பர் லாரி மோதல்; புது மாப்பிள்ளை பலி உறவினர்கள் சாலைமறியல்

திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்துபோனார். விபத்து ஏற்படுத்திய லாரியின் கண்ணாடியை உடைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2017-08-06 23:00 GMT

திருக்கனூர்,

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு புதுநகரை சேர்ந்த தணிக்காச்சலம் மகன் மணிகண்டன் (வயது 22), சரக்கு வாகன டிரைவர். இவருக்கும், ஊசுட்டேரி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களை இரு குடும்பத்தினரும் உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் திருமண ஏற்பாடு தொடர்பாக நண்பர்களை சந்தித்துவிட்டு மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று மதியம் 2.30 மணியளவில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். எதிரே திருவக்கரையில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி மணிகண்டன் படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடினார். இதை கண்ட பொதுமக்கள், அருகில் உள்ள மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடுபவரை மீட்டு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்புமாறு கூறினர். ஆனால் பணியில் இருந்த டாக்டர், போலீசார் தெரிவிக்காமல் ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்ப முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில் உயிருக்கு போராடிய மணிகண்டன் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த மணிகண்டனின் உறவினர்கள், மருத்துவமனை எதிரே திருக்கனூர் – விழுப்புரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்ப மறுத்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அங்கு நின்ற விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி மீது கல்வீசி தாக்கினர். இதில் லாரியின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, விபத்து குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். அதன்பேரில் மணிகண்டனின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்பின்னர் மணிகண்டனின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாலைமறியலால் மதியம் 3 மணி முதல் 5.30 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை மணிகண்டன் பரிதாபமாக இறந்ததால், அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்