தமிழக அரசு செயல்படாத நிலையில் உள்ளது: சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும்

தமிழக அரசு செயல்படாத நிலையில் உள்ளதாகவும், சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொய்தீன் கூறினார்.

Update: 2017-08-06 23:00 GMT
அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளி முகமதியார் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொய்தீன், மாநில பொதுச்செயலாளர் முகமதுஅபுபக்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆறுதல் கூறினர். அப்போது அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நிவாரண உதவியாக ரூ.80 ஆயிரத்துக்கான காசோலையை அய்யம்பேட்டை- சக்கராப்பள்ளி ஜமாத் சபையினரிடம் வழங்கினர். பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொய்தீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்ற கார் மீது, குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இந்த செயல் நாட்டில் தீவிரவாதம் வேகமாக வளர்ந்து வருவதை காட்டுகிறது.

தமிழக அரசு செயல்படாத நிலையில் உள்ளது. தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில செயலாளர்கள் ஷாஜகான், காயல்மகபூப், மில்லத் இஸ்மாயில், மாவட்ட தலைவர் முகமது சுல்தான், மாவட்ட செயலாளர்கள் பஷீர்அகமது, ராஜாஜி காசிம், பொருளாளர் ஜுல்பிகார் அகமது, ஜமாத் சபை தலைவர் நஜீப், செயலாளர் முகமது ஆரீப் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்