சசிகலா, தினகரன் தயவால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்–அமைச்சர் பதவி கிடைத்தது

சசிகலா, தினகரன் தயவால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்–அமைச்சர் பதவி கிடைத்தது என முன்னாள் எம்.எல்.ஏ. சாமி கூறினார்.

Update: 2017-08-06 22:45 GMT

மேலூர்,

தமிழகத்தில் அ.தி.மு.க.வில் அணிகள் இணைப்பு பற்றி நிலவும் பரபரப்பான சூழ்நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளரும், மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமியை நேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேலூரில் சந்தித்து பேசினார். பின்னர் சாமியும், அமைச்சர் உதயகுமாரும் வெளியே வந்தனர். அப்போது இணைப்பு பற்றி பேசினீர்களா என எழுப்பிய கேள்விக்கு சாமியின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே வந்தேன் என அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் சென்ற பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது சாமி கூறியதாவது:–

எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்–அமைச்சருக்குத்தான் வேண்டும். பொதுச்செயலாளருக்கு அந்த அவசியம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சி முழுமையாக நடைபெற வேண்டும். இந்தியாவில் ஒரு பெரிய கட்சியாக அ.தி.மு.க. இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் தினகரனிடம் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் முதல் கூட்டம் போட்டால்தான் கட்சி வளர்ச்சி பெற்று வெற்றியடையும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே உள்ளது. அதன்படியே தினகரனின் முதல் பொதுக்கூட்டம் மதுரை புறநகர் மேலூரில் வருகிற 14–ந்தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க. அணிகள் உறுதியாக இணையும்.

அமைச்சர் உதயகுமாருடன் ரகசிய பேச்சு கிடையாது. நானும், அவரும் அ.தி.மு.க.வில் தான் உள்ளோம். பொதுச்செயலாளர் சசிகலா, தினகரன் இல்லையெனில், கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சர் ஆகியிருக்க முடியாது. அவர்கள் தயவால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்–அமைச்சர் பதவி கிடைத்தது.

இக்கட்டான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக இருக்கட்டும் என கூறியதால்தான் 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதல்–அமைச்சரானார். அப்போது தினகரன் வெளியேறி இருந்தால் பாதி எம்.எல்.ஏ.க்கள் வெளியேறி எடப்பாடி முதல்–அமைச்சர் ஆகியிருக்கமாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்