சேரம்பாடி அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்டு காட்டு யானைகள் அட்டகாசம்

சேரம்பாடி அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்டு காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Update: 2017-08-06 22:00 GMT

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால், சப்பந்தோடு, சந்தனமாக்குன்னு உள்பட பல பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு வருகிறது. மேலும் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. மேலும் இரவு நேரத்தில் குடியிருப்புகளை முற்றுகையிட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் அச்சத்துடன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் சேரம்பாடி அருகே சந்தனமாக்குன்னு பகுதியில் 2 காட்டு யானைகள் நுழைந்தன. பின்னர் அதே பகுதியை சேர்ந்த ஹனில்தாஸ் என்பவரது வீட்டு சன்னல் கண்ணாடிகளை உடைத்தது. இதை கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வீட்டில் ஹனில்தாஸ் குடும்பத்தினர் பயத்தில் பதுங்கி இருந்தனர்.

இதனிடையே காட்டு யானைகளும் வீட்டை சுற்றி வந்தவாறு இருந்தன. இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் (பொறுப்பு) மனோகரன், வன காப்பாளர் ராபர்ட் வில்சன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து காட்டு யானைகளை விரட்டியடித்தனர். இதனால் நேற்று காலையில் காட்டு யானைகள் அங்கிருந்து சென்றன.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகள் தொடர்ந்து இந்த பகுதியில் முகாமிட்டு வருகிறது. இதனால் இரவில் வெளியே நடமாடுவதற்கு அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்