அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவியை பயன்படுத்தி பெருந்துறைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதே எனது முதல் பணி

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவியை பயன்படுத்தி பெருந்துறைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதே எனது முதல் பணி என்று பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2017-08-06 23:00 GMT

பெருந்துறை,

பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்தை அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நேற்று பெருந்துறை பவானி ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னிமலை ரோட்டில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

போட்டி அரசியல் நடத்த நான் விரும்பவில்லை. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வலுசேர்க்கும் வகையில் அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு கொடுத்து செயல்படுவோம். உள்ளாட்சி தேர்தலையும், பாராளுமன்ற தேர்தலையும் எதிர்கொள்ளும் இந்நேரத்தில் கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் போன்றவர்கள் பேசுவது தனிப்பட்ட கருத்து.

ஈரோடு மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இம்மாவட்ட அமைச்சர்கள் குரல் கொடுக்க வேண்டும். என்னுடைய அமைப்பு செயலாளர் பதவியை பயன்படுத்தி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவதே எனது முதல் பணியாகும். ஓராண்டாக கட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படாத நிலையில் பணிகளை இனி வேகப்படுத்துவேன்.

இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்