ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை ஆழமாக வெட்டி எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருமானூர் பகுதியில் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை ஆழமாக வெட்டி எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2017-08-06 22:45 GMT
திருமானூர்,

தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை வெட்டி எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்தின் வாயிலாக, தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில் சுமார் 1 மீட்டர் ஆழம் வரை வண்டல் மண்ணை வெட்டி எடுக்க அரசு அனுமதி வழங்கி யது.

இதையடுத்து தமிழ கத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்களில் தற்போது வண்டல் மண் வெட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் இலந்தைகூடம், கண்டராதித்தம், ஏலாக்குறிச்சி, காமரசவல்லி, கீழப்பழுவூர், சாத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் வண்டல் மண் வெட்டி எடுக்கப்படுகிறது.

அரசு 1 மீட்டர் ஆழத்திற்கு வண்டல் மண் வெட்டிக்கொள்ள அனுமதி கொடுத்தாலும் பலரும் 5 மீட்டர் ஆழம் வரை அதிக ஆழத்துக்கு ஒரே இடத்தில் மண்ணை வெட்டி எடுத்து செல்கின்றனர்.

மேலும், விரைந்து மண்ணை எடுத்து செல்லும் வகையில் ஏரி மற்றும் குளங்களின் கரையோரங்களில் அதிக ஆழத்தில் மண்ணை வெட்டி எடுக்கப்படுகிறது. இதுபோன்ற அதிக ஆழத்தில் மண் வெட்டி எடுக்கப்படும் போது மழை நீர் ஏரியை விட்டு வெளியேற வழியில்லாமல் போக வாய்ப்புள்ளது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், அதிக ஆழத்தில் மண் வெட்டி எடுக்கப்படுவதால் மழை காலங்களில் தண்ணீர் தங்கும் பச்சத்தில் கால்நடைகளும், மனிதர்களும் தண்ணீரில் தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்பட அதிகப்படியான வாய்ப்புள்ளது. எனவே அதிக ஆழத்தில் மண்ணை வெட்டி எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒரே ஆழத்தில் பரவலாக வண்டல் மண்ணை வெட்டி எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டப்பட்ட இடங்களில் சமன் படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்