கிணற்றை ஊராட்சிக்கு வழங்காததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை கண்டித்து உண்ணாவிரதம்
பெரியகுளம் அருகே, கிணற்றை ஊராட்சிக்கு வழங்காததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம்,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சி பகுதியில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தோட்டம் இருந்தது. இங்கு புதிதாக ஒரு கிணறு வெட்டும் பணி நடைபெற்றது. அப்போது குடிநீர் பற்றாக்குறை நிலவியது.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருக்கும் தண்ணீரை கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக வழங்க வலியுறுத்தி கடந்த மாதம் முதலே பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும், புதிதாக வெட்டப்பட்ட கிணற்றை ஊராட்சிக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தையில், கிணற்றின் அருகே உள்ள நிலத்தை யாராவது வாங்கினால், கிணற்றை கிராம மக்களுக்கு தானமாக வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்தனர். இந்த நிலையில் கிணறு உள்ள தோட்டத்தை சுப்புராஜ் என்பவருக்கு கடந்த மாதம் 12–ந் தேதியே விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து கிராம மக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கடந்த மாதம் 26–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் கிராம கமிட்டியினரை கடந்த 29–ந் தேதி சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், சுப்புராஜுவை அழைத்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்குமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் இதுவரை ஒப்படைக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் கிணற்றை ஊராட்சிக்கு வழங்காத ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை கண்டித்தும், அதை உடனடியாக ஒப்படைக்க வலியுறுத்தியும் லட்சுமிபுரத்தில் கிராம மக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (திங்கட்கிழமை) இரவு குத்துவிளக்கு ஏந்தி ஊர்வலமாக செல்ல உள்ளதாக கிராம பிரதிநிதிகள் தெரிவித்தனர்.