சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் சேதமடைந்த பள்ளி கட்டிடம்; திறக்கப்படாத நூலகம்

சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதேபோல் அந்த கிராமத்தில் உள்ள நூலகம் 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.

Update: 2017-08-06 22:00 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி ஊராட்சிக்குட்பட்டது மருதிப்பட்டி. இங்கு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள 4 கட்டிடங்களில் ஒரு கட்டிடம் மட்டும் ஓட்டுக்கட்டிடமாக உள்ளது. கடந்த 1971–ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓடுகள் சேதமடைந்த நிலையில், பராமரிப்பு வேலைகள் நடைபெற்றன. தற்போது பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் மீண்டும் சேதமடைந்து காணப்படுகின்றன. இத்துடன் பள்ளி கட்டிடத்தில் ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ஆபத்தான கட்டிடத்தால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலான பெற்றோர் மறுத்து வருகின்றனர். எனவே தற்போதுள்ள ஓட்டு கட்டிடத்தை அகற்றிவிட்டு, பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி கூறுகையில், மருதிப்பட்டி அரசுப்பள்ளியில் 306 மாணவ–மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் 4 கட்டிடங்களில் ஒரு கட்டிடம் மட்டும் ஓட்டு கட்டிடமாக உள்ளது. 5 வருடங்களுக்கு முன்பு சரிவர பராமரிப்பு பணி நடைபெறாததால், மழைக்காலங்களில் பள்ளி கட்டிடத்தினுள் மழைநீர் உள்ளே புகுந்து வருகின்றது. மேலும் பள்ளி கட்டிடமும் சேதமடைந்து காணப்படுவதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. பலமுறை இதுகுறித்து புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

இதேபோல் மருதிப்பட்டியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் ஊர்ப்புற நூலகம் திறக்கப்படாமல் உள்ளது. மருதிப்பட்டி பொதுமக்கள் சார்பில் மாணவர்கள் கல்வி திறனை வளர்க்கும் வகையில் கிராமத்தில் நூலகம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து கோரிக்கைகளுக்கு பலனாக மருதிப்பட்டியில் நூலகம் திறக்கப்பட்டது. ஆனால் நூலகம் திறந்த சில தினங்களிலேயே மூடப்பட்டுவிட்டது. அன்று முதல் கடந்த 5 ஆண்டுகளாக அந்த நூலகம் திறக்கப்படாமலேயே உள்ளது. இதனால் நூலகத்தினுள் உள்ள புத்தகங்கள் கரையானுக்கு இரையாகி வருகின்றன. எனவே இந்த நூலகத்தை திறக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்