திடீர் கோபம் தீராத தொல்லை

நன்றாக நெருங்கிப் பழகி கொண்டிருப்பவர்களிடத்தில் திடீரென்று ஏற்படும் மனஸ்தாபம் அவர்களுக்கிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி விடும்.;

Update: 2017-08-06 11:00 GMT
ன்றாக நெருங்கிப் பழகி கொண்டிருப்பவர்களிடத்தில் திடீரென்று ஏற்படும் மனஸ்தாபம் அவர்களுக்கிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி விடும். நெருக்கமான நண்பர்களில் ஒருவருடைய செயல்பாடு மற்றவருக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக அமையும்போது இருவரும் நிதானமாக பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மனநிலைக்கு வர வேண்டும்.

பாதிக்கப்பட்டவர் பிரச்சினையை அவருடைய மனநிலையில் இருந்துதான் யோசித்து பார்ப்பார். ‘இவ்வளவு நாள் நன்றாக பழகிவிட்டு இப்படி நடந்து கொண்டுவிட்டாரே?’ என்ற ஆதங்கம்தான் அவரிடம் வெளிப்படும். தன் பக்கத்தில் இருக்கும் நியாயங்களை மட்டுமே கவனத்தில் கொள்வார். ஆனால் மற்றவர் எந்தமாதிரியான சூழ்நிலையில், நிர்பந்தத்தில் அப்படி நடந்து கொண்டார் என்பதையும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். அவர் சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும். அதற்கான காரணங்களையும் கண்டறிய முற்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் தன் தரப்பு நியாயங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், அடுத்தவரின் செயல்பாட்டுக்கும் ஏதேனும் ஒரு நியாயமான காரணம் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அத்தகைய சிந்தனை அவரை பற்றிய தவறான எண்ணங்கள் தோன்றுவதை தவிர்க்க உதவும். அவர் மீதான கோபத்தை கட்டுப்படுத்தவும் செய்யும். மனக்காயம் வடுவாக மாறாமல் பிரச்சினைக்கு தீர்வு காண வித்திடும். அவர் தவறே செய்திருந்தாலும் மன வருத்தம் கொள்ளாமல் அதனை தட்டிக்கேட்கும் மனப்பக்குவம் ஏற்படும். நெருங்கி பழகிய உரிமையில் கோபத்திலோ, ஆத்திரத்திலோ வார்த்தைகளை கொட்டியிருக்கலாம். அதனை பெரிதுபடுத்தாமல் மனம்விட்டு பேசும் பட்சத்தில் ஒருவருக் கொருவர் தங்கள் தரப்பு நிறை, குறைகளை நிவர்த்தி செய்யும் சந்தர்ப்பம் உருவாகும். நட்புக்கு களங்கம் ஏற்படாமல் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வும் கண்டுவிடலாம். 

மேலும் செய்திகள்