பெண்ணாய் வாழ்வதே பெருமை

“பெண்ணாக வேண்டும் என்ற ஆசை எனக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்தது. என் மனது நான் பெண்ணாகியேத் தீர வேண்டும் என்றது. எனக்குள்ளே இருந்த ‘அவளை’ என்னால் அடக்கமுடியவில்லை.

Update: 2017-08-06 07:10 GMT
“பெண்ணாக வேண்டும் என்ற ஆசை எனக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்தது. என் மனது நான் பெண்ணாகியேத் தீர வேண்டும் என்றது. எனக்குள்ளே இருந்த ‘அவளை’ என்னால் அடக்க முடியவில்லை. இதோ இப்போது பெண்ணாகிவிட்டேன். நிம்மதியாக வாழ்கிறேன். நான் சிறுவயதில் சினிமா பார்க்கும்போது நடிகைகளின் அழகை வியந்து பார்ப்பேன். ஷோபனா, மஞ்சுவாரியார் போன்றவர்களின் அழகு என்னை கவர்ந்திழுத்தது. எனக்குள்ளே இருந்த பெண், அவர்களைப் போல் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்காக என்னையே நான் தயாராக்கினேன்..” என்று கூறும் அஞ்சலி அமீர் திருநங்கை நடிகை. ‘பேரன்பு’ என்ற படத்தில் பிரபல நடிகர் மம்முட்டியுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

“பேரன்பு படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்தது. முதல் நாள் கேமிரா முன்னால் நின்றபோது பதற்றமாக இருந்தது. அந்த காட்சி ஒரு உணவகத்தில் படமாக்கப்பட்டது. மம்முட்டி என்னோடு நடித்தார். ஆக்‌ஷன் என்றதும் ஒத்திகை என்று நான் நினைத்தேன். நடித்து முடித்ததும் டைரக்டர் ராம் ஓடிவந்து ‘ஓகே’ என்றார். நடிப்பு என்றால் இவ்வளவுதானா என்று எளிதாக நினைத்தேன். ஆனால் மறுநாள் நடிக்க ரொம்ப சிரமப்பட்டுப் போனேன். ராம் அந்த படத்தின் முழு கதையையும் மனதிற்குள் வைத்திருக்கிறார். எதையும் அவர் ‘ஸ்கிரிப்ட்’டாக தயார் செய்து வைத்திருக்கவில்லை. வசனங்களை உடனுக்குடன் சொல்லித்தருவார். மம்முட்டி எனக்கு ரொம்ப ஆதரவு தருகிறார். இனி யாரிடமும் திருநங்கை என்று சொல்லாதே என்று கூறினார்” என்கிறார், அஞ்சலி.

‘ஆணாக இருந்த நீங்கள் சினிமாவில் நடிப்பதற்காகவா பெண்ணாக மாறினீர்கள்?’ என்ற கேள்விக்கு, “நடிகையாக வேண்டும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்று எல்லா பெண்களையும் போல் நானும் ஆசைப்பட்டேன். ஷோபனா, மஞ்சுவாரியார் போன்றவர்கள் நடித்த சினிமாக்களை பார்த்துவிட்டு, ஓடிப்போய் கண்ணாடி முன்பு நின்று என்னைப் பார்ப்பேன். ‘கடவுளே அவர்களைப் போன்று நானும் ஒரு அழகான பெண்ணாக பிறந்திருக்கலாமே!’ என்று நினைப்பேன். ஆனால் அப்போது கண்ணாடியில் நான் ஒரு நாகவல்லிபோல்தான் காட்சியளித்தேன்” என்று சிரித்தபடி விளக்கம் தருகிறார்.

அஞ்சலி, கேரளாவில் தாமரைச்சேரி என்ற இடத்தில் ஆணாக பிறந்தவர். ஒரு வயதில் இவரது தாயார் இறந்துவிட்டார். பாட்டியிடம் வளர்ந்திருக்கிறார். இவருக்கு சில நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள், இவரை பெண்ணாகவே பாவித்திருக்கிறார்கள். பள்ளிக்கு செல்லும்போது கண்மை தீட்டி, மஸ்கரா பூசிவிட்டு சென்றிருக்கிறார். ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்து இவர் பெண் போன்று நடந்து செல்வதை, ஆசிரியைகளே வியப்போடு பார்த்திருக்கிறார்கள்.

யாராவது அது பற்றி விளக்கம் கேட்டால், ‘இது என் கால்.. இதில் எனக்கு பிடித்த செருப்பை அணிந்திருக்கிறேன்’ என்று பதிலளிப்பார். அடுத்து அவர்கள், ‘நீ பெண் என்றால் ஐஷேடோவும் போடவேண்டியதுதானே?’ என்று கேட்பதுண்டு. உடனே, ‘பெண்தான் அதை போடவேண்டும் என்று ஐஷேடோ பாக்சில் எழுதி வைத்திருக்கிறார்களா?’ என்று கேட்பாராம். இப்படி எல்லாம் தைரியமாக பதிலடி கொடுத்தாலும் இவர், பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் வீட்டை விட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

“நான் பெருங்கஷ்டங்களை எல்லாம் அனுபவித்திருக் கிறேன். அதை நினைத்து இப்போதுகூட அழுது விடுவேன். எனது வீடு, குடும்பத்தார், நண்பர்களை எல்லாம் இனி திரும்பக் கிடைக்க வாய்ப்பே இல்லாத நிலையில் இழந்திருக்கிறேன். ஆனால் இன்று நான் அழுதால், நாளை அதைவிட இரட்டிப்பு சக்தியோடு எழுவேன். அதனால் அழுவதை நான் தவறானதாக கருதவில்லை. அழத் தோன்றும்போது அழுதுவிட வேண்டும். எந்த உணர்ச்சியையும் அடக்கி வைக்கக் கூடாது. நமக்கு தோன்றுவதை யாருக்காகவும், எதற்காகவும் நசுக்கி வைக்கக் கூடாது. ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது. அதை நமது இஷ்டப்படி வாழவேண்டும். இதுதான் என் வாழ்வியல் கருத்து” என்கிறார்.

ஆண் உடலும், பெண் மனதும் கொண்டவராக பிறந்த அஞ்சலி, தனது உடலையும் பெண்ணாக உருவாக்கிக்கொள்ள ஏகப்பட்ட அவஸ்தைகளை அனுபவித்திருக்கிறார்.

“நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும், கோவை சென்றேன். அதனால் படிப்பு அதோடு நின்றது. வாழ்வாதாரத்திற்கு வழியின்றி அலைந்துதிரிந்தேன். பின்பு நான் சென்னையில் உள்ள திருநங்கை அமைப்பு ஒன்றில் போய் சேர்ந்தேன். அவர்களை போல் நானும் வாழ்ந்தேன்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம் உண்டு. அந்த குடும்பத்திற்குள் புதிதாக வருகிறவர்களை மகளாகவோ, மரு மகளாகவோ ஏற்றுக் கொள்வார்கள். நான் எதுவும் தெரியாமல் அங்குபோய் சேர்ந்தேன். கஷ்டங்களை அனுபவித்தேன். அப் போதுதான், அது என் வாழ்க்கையோ வழியோ இல்லை என்பதை உணர்ந்தேன். பின்பு கேரளா திரும்பிச் சென்றேன். ‘பிளஸ்-டூ’ பரீட்சை எழுதினேன். மீண்டும் கோவை சென்று அங்கு பியூட்டி பார்லரிலும், கால்சென்டரிலும் வேலை பார்த்தேன். கிடைத்த பணத்தை எல்லாம், நான் உடல்ரீதியாகவும் பெண்ணாக மாறுவதற்கான சிகிச்சை செலவுகளுக்காக சேர்த்துவைத்தேன்.

ஹார்மோன் சிகிச்சை தொடங்கியது. முதுகெலும்பில் ஊசி போட்டார்கள். வலியில் நடுங்கிப் போனேன். பெண்ணுக்கான அங்கங்கள் வளரத் தொடங்கிய பின்பு நான் பார்களில் நடனம் ஆடினேன். அப்போது ஓரளவு அதிக பணம் சேர்ந்தது. அடுத்து அதிக செலவுள்ள உறுப்பு புனரமைப்பு சிகிச்சைக்காக தயாரானேன். பத்து லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. நரக வேதனையையும் அனுபவிக்க வேண்டியதிருந்தது. ஆனால் என் வாழ்க்கை லட்சியங்களையும், ஆசைகளையும் அடைந்து மற்றவர்கள் முன்னால் நான் தலைநிமிர்ந்து நிற்க அத்தனையையும் சகித்துக் கொண்டேன். உறுப்பு புனரமைப்பு சிகிச்சைக்கு பின்புதான் என் உடலும் பெண்ணானது. அப்போது நான் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளானேன். அவைகளை எல்லாம் நினைத்து கலங்கிக் கொண்டிருக்க வேண்டாம். நான் உங்களோடு இனிமையான காதல் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்” என்ற அவர், காதல்.. கல்யாண எண்ணங்கள் பற்றி மனந்திறக்கிறார்!

“சிறுவயதிலே எனக்குள் காதல் உருவானது. ஆனால் அப்போது நான் பரிபூரண பெண்ணாக இல்லாததால், காதலை ஆணிடம் வெளிப்படுத்த பயந்தேன். 11-ம் வகுப்பு படிக்கும்போது ஒருவரோடு அழுத்தமான காதல் கொண்டேன். ஆனால் அது முறிந்து போனது. இப்போது ஆழமாக காதலித்துக் கொண்டிருக்கிறேன். என் காதலர் கோழிக்கோட்டை சேர்ந்தவர். நல்லவர். என் மீது அதிக அன்பு செலுத்துகிறார். ஆனால் அவரது குடும்பத்தினருக்கு தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என்று பயப்படுகிறார். நான் சுதந்திர பறவை. எனக்கு எந்த பயமும் கிடையாது. என்னிடம் யாராவது எதிர்கேள்வி கேட்டால், ‘போடா உன் வேலையை பார்..’ என்பேன். என் காதலரிடம் இருந்து கிடைக்கும் அன்பும், ஆதரவும் போதுமானது. காதல் எனக்கு புதிய சக்தியை தருகிறது.

காதலின் கடைசிக் கட்டம் திருமணம் என்று நான் கருதவில்லை. காதலிப்பவர்கள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. திருமணத்தோடு காதல் முடிந்து, கடமைகள் தோன்றிவிடும். திருமணம் செய்து கொள்ளாமலே வாழும் வாழ்க்கையில் கிடைக்கும் காதல், திருமணத்தில் கிடைக்காது. எனக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசை இல்லை.

அடுத்து ஒரு ஜென்மம் உண்டு என்றால் நான் முழுமையாக ஆணாக வாழ வேண்டும். உண்மையை சொன்னால் நான் 17 வயது வரை உடல்ரீதியாக பாதி ஆணாக வாழ்ந்தேன். அதனால் எனக்கு ஆண்களின் மனோநிலை தெரியாது. பெண்களின் மனோநிலைதான் தெரியும். இந்த சமூகத்தில் நன்றாக வாழ ஆண்களால்தான் முடிகிறது. ஒரு பெண் பல பருவங் களில் பல கட்டங்களை கடந்து போகவேண்டிய திருக்கிறது. கல்யாணம் செய்து கொண்டால் இன்னொரு வீட்டிற்கு போகவேண்டியதிருக்கிறது. ஆண்களுக்கு அப்படிப்பட்ட நெருக்கடி எதுவும் இல்லை. ஆண்கள் எந்த இரவிலும் எங்கும் செல்லலாம். இஷ்டத்திற்கு வாழலாம். அதனால்தான் நான் ஆணாக வேண்டும் என்று சொல்கிறேன்..” என்கிறார்.

அஞ்சலி சிகிச்சை மூலம் பெண்ணாக உருமாறிவிட்ட பின்பு, இவரிடம் பெண்களுக்குரிய சுபாவம் ஏதேனும் வந்திருக் கிறதா? என்று கேட்டபோது, “தைரியம் வந்திருக்கிறது” என்று சொல்கிறார்.

வெற்றிகளை குவிக்கட்டும் இந்த வீர நாயகி! 

மேலும் செய்திகள்