கலங்கி நிற்கும் கதிராமங்கலம்

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் போராட்டமாகவே காட்சி அளிக்கிறது. டாஸ்மாக் கடைக்கு எதிராகவும், குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும் மக்கள் போராடி வருகிறார்கள்.

Update: 2017-08-06 05:41 GMT
மிழகத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் போராட்டமாகவே காட்சி அளிக்கிறது. டாஸ்மாக் கடைக்கு எதிராகவும், குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும் மக்கள் போராடி வருகிறார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் ஓ.என்.ஜி.சி. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதை கண்டித்து தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்திலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக 1,000 அடி முதல் 12 ஆயிரம் அடி வரை ஆழ்துளை கிணறுகள் அமைத்துள்ளன. இதற்காக தரை மட்டத்தில் இருந்து 100 அடி ஆழத்திற்கு ஒருவகை குழாய்களை பதித்துள்ளது. அதற்கு கீழ் சற்று குறைந்த அளவிலான 2 விதமான குழாய்களை பதித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகளை தோண்டி அதில் 33 ஆழ்துளை எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் நிலையங்கள் உள்ளன. இதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் மட்டும் 12 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கச்சாஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் 2002-ம் ஆண்டு முதல் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக கச்சாஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது.



இங்கிருந்து பூமிக்கு அடியில் 6 கிலோ மீட்டர் நீளத்துக்கு குழாய்கள் வழியாக கச்சாஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குத்தாலம் அருகே உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு எண்ணெய், எரிவாயு என தனித்தனியாக பிரித்து நாகூர் அருகே உள்ள நரிமணத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது.

கதிராமங்கலத்தில் ஊரின் அனைத்து பகுதிகளிலும் வயல்களில் குறுக்கு, நெடுக்காக ஓ.என்.ஜி.சி. குழாய்களை பதித்துள்ளது. சுமார் 6 அடி ஆழத்திற்கு இந்த குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் குழாய்கள் பதிக்கப்பட்ட போது குழாய்கள் செல்லும் இடங்களில் அடையாளம் இடப்பட்டது. ஆனால் தற்போது பல இடங்களில் இந்த அடையாளங்கள் இல்லை. இதனால் குழாய்கள் எந்த வழியாக செல்கிறது என்பது சம்பந்தப்பட்ட வயலின் உரிமையாளர்களுக்கு கூட தெரியாத நிலை தான் உள்ளது.

மேலும் பல அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து இருப்பதால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் குடிநீரின் தன்மையும் பாதிக்கப்படுகிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஓ.என்.ஜி.சி. தற்போது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுத்து வரும் இடங்களில் மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை மறைமுகமாக செயல்படுத்தக்கூடும் என்று பரவலாக பேசப்படுகிறது. ஏற்கனவே கச்சாஎண்ணெய் கசிவினால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டங்களை செயல்படுத்தினால் மேலும் பாதிப்பு ஏற்படும் எனவும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 19-ந்தேதி ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினர் பழுதடைந்த ஆழ்துளை கிணற்றை சீரமைப்பதற்கு புதிய குழாய்களை பதிப்பதற்காக வந்தனர். அப்போது அங்கு கெமிக்கல் டேங்கர் லாரியும் வந்ததால் திரண்டு வந்த பொதுமக்கள் ஏற்கனவே நாங்கள் ஓ.என்.ஜி.சி.யால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே புதிய குழாய்கள் பதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அது தான் அந்த பகுதி மக்களின் போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது. ஆனால் அதிகாரிகள் “ குழாய் பதிக்க வரவில்லை, பழுதை சரிசெய்ய வந்துள்ளோம்” என கூறினர். இதை மக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.



அதன் பின்னர் ஜூன் மாதம் 2-ந்தேதி மீண்டும் குழாய்களை பதிக்க வந்தனர். அப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அதிகாரிகள் புதிய குழாய்களை பதித்தனர்.

இந்த நிலையில் ஜூன் மாதம் 30-ந்தேதி கதிராமங்கலம் பகுதியில் எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்ட இடத்தின் அருகே மர்ம நபர்கள் முட்செடிகளை வைத்து தீ வைத்ததால் அங்கு போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் இது தொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தாசில்தார் மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரி கொடுத்த புகார்களின் அடிப்படையில் தனித்தனியே வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்த பகுதி மக்கள் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் வெளியேறக்கோரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், இந்த போராட்டம் மக்களை வெகுண்டெழ செய்துள்ளது. மீத்தேன் திட்ட பாதிப்புகளை அறிந்த மக்கள் தற்போது ஓ.என்.ஜி.சி.யால் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அஞ்சுவதோடு, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், மண்சோறு சாப்பிடும் போராட்டம், கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மக்களின் போராட்டங்கள் நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் நேரில் சென்று மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் கதிராமங்கலம் பகுதியில் ஆய்வு பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்ய முன்வர வேண்டும். இல்லையென்றால் கதிராமங்கலம் தொடர்ந்து போராட்ட களமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் கதிராமங்கலத்தின் இந்த நிலை மாற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



இது குறித்து கதிராமங்கலம் பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

“கதிராமங்கலத்தை கதிர்வேய்ந்த மங்கலம் என்று கம்பர் பாடி உள்ளார். மன்னர்கள் காலத்தில் பலரும் வந்து விரும்பி தங்கிய பெருமையுடையது இந்த ஊர். இந்த பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுத்துச்செல்ல பதிக்கப்பட்ட குழாய்கள் வயல்களில் எந்த பகுதியில் செல்கிறது என்று தெரியாத நிலை உள்ளது. இதனால் வயல்களில் கூலி வேலைக்கு வருவதற்கு கூட ஆட்கள் பயப்படுகிறார்கள். மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் இந்த குழாய்கள் செல்கிறது. ஆனால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பராமரிப்பு பணிகளை சரியாக செய்வது இல்லை.

வெளிநாடுகளில் மக்கள் நடமாட்டம், விளைநிலங்கள் இல்லாத பகுதியில் இத்தகைய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அது போல தமிழகத்திலும் அமைக்கட்டும். பாசன பகுதிகளில் அமைப்பதால் விளைநிலங்கள் பாழாவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. குழாயில் உப்பு படிமத்தால் அரிப்பு ஏற்பட்டு கச்சாஎண்ணெய் கசிந்துள்ளது. 20 ஆண்டுகள் உத்தரவாதம் உள்ள குழாயில் எப்படி இந்த பாதிப்பு வருகிறது.

இதனை பார்க்கும் போது மற்ற இடங்களிலும் இது போன்று எண்ணெய்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதோ? என அச்சப்பட வேண்டிய நிலை உள்ளது. ஓ.என்.ஜி.சி. முறையாக பராமரிப்பு செய்து வந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது.

ஏற்கனவே காவிரி நீர் வராததால் விவசாய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற பணிகளாலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. நிலத்தடி நீர் மற்றும் மண் வளத்தையாவது நாம் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். குடிநீரில் அமிலத்தன்மை கலந்துள்ளதால் எங்கள் குழந்தைகளுக்கு நாங்களே விஷம் கலந்த தண்ணீரை கொடுக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் கதிராமங்கலம் மக்கள் கலங்கிப்போய் நிற்கிறோம். தொடர்ந்து போராடியும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனி ஓ.என்.ஜி.சி நிர்வாகம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள மாநில அரசு அனுமதி தரக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதனை திரும்பபெற வேண்டும்”.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஓ.என்.ஜி.சி. சொல்வது என்ன?

ஓ.என்.ஜி.சி. உற்பத்தி பொது மேலாளர் புகழேந்தி கூறியதாவது:-

“நமது நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதால் அது கிடைப்பதற்கான சாத்தியகூறுகள் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு அதனை எடுப்பதற்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படுகிறது. மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை அனுமதியுடன் தான் பணிகள் அனைத்தும் நடக்கிறது.

நாடு முழுவதும் தேவைப்படும் கச்சா எண்ணையின் அளவில் தற்போது 30 சதவீதம் தான் உள்நாட்டில் கிடைக்கிறது. மற்ற 70 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தான் ஈடு செய்ய வேண்டி உள்ளது. அதிக ஆழத்தில் ஏறக்குறைய ஆயிரம் அடி முதல் 11 ஆயிரம் அடி அளவில் இருந்து தான் மண்ணுடன் கலந்துள்ள கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுக்கிறோம். இதனால் மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள நிலத்தடிநீர் பாதிக்கப்படாது. உரிய தொழில்நுட்பம் மேற்கொள்ளப்படுகிறது. பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இல்லை.

குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள இடம் குறித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். நாளடைவில் அவை அகற்றப்பட்டு இருக்கலாம். அது குறித்து தெரிய வந்தால் அந்த பகுதியில் உரிய அடையாள பலகைகள் வைக்கப்படும்”.

மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

“வெளியேற்ற வேண்டும்”

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்த கருத்து:-

“காவிரி டெல்டா பகுதியில் விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைக்கக் கூடாது. டெல்டா பகுதியில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு எதுவும் எடுக்கக்கூடாது. உணவு சக்தியை அழித்து எரிசக்தியை எடுப்பதால் என்ன பயன்?

கதிராமங்கலம் கிராம மக்கள் நடைமுறையில் ஓ.என்.ஜி.சி.யால் பல்வேறு விபத்துகளை பார்த்துள்ளனர். அதனால் தான் எங்கள் பகுதியில் வேண்டாம் என போராட்டம் நடத்துகிறார்கள். காவிரி டெல்டா பகுதியில் எங்குமே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படக்கூடாது. அதனை உடனே வெளியேற்ற வேண்டும். இதனை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் கடலில், ஆற்றுப்படுகைகளில் இது போன்று எடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் தான் விளைநிலங்களில் எடுக்கப்படுகிறது. நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஆனால் இதனை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள்”.

இவ்வாறு மணியரசன் தெரிவித்தார்.

“விளைநிலங்கள் பாதிப்பு”

ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள இடத்தின் உரிமையாளர் ஸ்ரீராம் கூறியதாவது:-

“ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்த போது இது போன்ற பாதிப்புகள் வரும் என்று நிலத்தின் உரிமையாளர்கள் யாருக்கும் தெரியாது. மேலும் எங்கள் இடத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை உரிமத்தை புதுப்பித்தனர். ஆனால் 2014-ம் ஆண்டுக்குப்பின்னர் உரிமத்தை புதுப்பிக்கவில்லை.

இது குறித்து நாங்கள் கேட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை. மேலும் விளைநிலங்களில் குழாய்கள் எப்படி போகிறது என்பது தெரியாததால் வேலைக்கு கூட ஆட்கள் வர பயப்படுகிறார்கள். தற்போது எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால் விளைநிலங்கள் பாழ்பட்டுள்ளது. நிலத்தில் படிந்துள்ள எண்ணெய் கசிவுகளை எப்படி அகற்றுவது என்றும் தெரியவில்லை. தற்போது நடந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன? என கேட்டுள்ளோம். விளைநிலங்களில் படிந்துள்ள எண்ணெய், மழை பெய்வதால் மற்ற வயல்களுக்கும் பரவி அந்த விளைநிலங்களும் பாதிக்கப்படுகிறது.

எனவே இதனை அகற்றுவது எப்படி? இனி இது போன்று நடைபெறாமல் இருக்க நிரந்தர தீர்வு என்ன? என்பது குறித்து ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். அதற்கு அவர்கள் செப்டம்பர் மாதம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்”.

இவ்வாறு அவர் கூறினார்.

“அதிர்வலைகளால் சந்தேகம்”

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், “ஓ.என்.ஜி.சி.யை எதிர்த்து போராடிய 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். மேலும் எங்கள் பகுதிக்கு ஓ.என்.ஜி.சி. வேண்டாம். எனவே அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

பழைய குழாய்கள் பழுதடைந்துள்ளதால் புதிய குழாய்கள் பதிக்க வேண்டும் என்று ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் வந்த போது கெமிக்கல் டேங்கர் லாரியுடன் வந்தனர். இது எங்களை முதலில் சந்தேகப்பட வைத்தது. இது குறித்து கேட்ட போது உரிய விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான பணிகளில் ஈடுபடக்கூடும் என சந்தேகம் அடைந்தோம். ஜூன் 2-ந்தேதி எங்கள் பகுதியில் திருவிழா நடந்த போது, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய குழாய்கள் பதித்ததில் கிராமங்களில் அதிர்வலைகள் ஏற்பட்டன. இதனால் வேறு ஏதாவது செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என அஞ்சுகிறோம்.

எங்கள் பகுதியில் உள்ள குடிநீரை பரிசோதனைக்காக அரசு எடுத்துச்சென்றது. ஆனால் இதுவரை எந்த தகவலும் வரவில்லை. ஓ.என்.ஜி.சி. போட்டுள்ள குழாய்கள் தரமற்றதாக உள்ளது. அதனால் தான் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இனி இது போன்ற சம்பவம் நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம். எனவே எங்கள் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்ட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்”.

மேற்கண்டவாறு முருகானந்தம் தெரிவித்தார்.

“ஊரை விட்டு செல்ல முடிவு செய்த விவசாயி”

கதிராமங்கலத்தை சேர்ந்த விவசாயி ராஜாராமன் கூறுகையில், “ஓ.என்.ஜி.சி.யால் எங்கள் பகுதியில் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. கால்நடைகள் கூட அந்த தண்ணீரை குடிக்க முடியாத நிலை உள்ளது. எனது தாயாரும் நோயினால் அவதிப்பட்டார். அப்போது குடிநீரால் தான் பிரச்சினை இருக்கிறது என்பதை அறிந்து எனது தாயாரை கும்பகோணத்திற்கு அழைத்துச்சென்று அங்கேயே தங்க வைத்தேன். அதன் பின்னர் அவரது உடல்நலம் சீராக உள்ளது. இதனால் எனது குடும்பத்தினரையும் கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்து விட்டேன். நான் மட்டும் தான் கதிராமங்கலத்தில் தங்கி இருந்து விவசாயம் செய்து வந்தேன். இந்த பிரச்சினையால் நானும் கதிராமங்கலத்தை விட்டு காலி செய்ய முடிவு செய்தேன். ஆனால் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதால் அவ்வாறு செல்லவில்லை”என்றார்.

மேலும் செய்திகள்