குடியிருப்புவாசி புகார் எதிரொலி நடிகர் அமீர்கான் வீட்டில் சீரமைப்பு பணியை தொடங்க தடை

குடியிருப்புவாசி அளித்த புகாரை அடுத்து நடிகர்அமீர்கான் வீட்டில் சீரமைப்பு பணியை தொடங்க மாநகராட்சி தடை விதித்துள்ளது.

Update: 2017-08-05 22:31 GMT

மும்பை,

குடியிருப்புவாசி அளித்த புகாரை அடுத்து நடிகர் அமீர்கான் வீட்டில் சீரமைப்பு பணியை தொடங்க மாநகராட்சி தடை விதித்துள்ளது.

நடிகர் அமீர்கான் வீடு

நடிகர் அமீர்கான் மும்பை பாந்திரா பாலிஹில் பகுதியில் உள்ள மெரினா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு குடியிருப்பின் தரைதளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் வீடுகள் உள்ளன. நடிகர் அமீர்கான் வீட்டிற்குள் இருந்தபடியே மேல்தளத்திற்கு செல்லும் வகையில் படிக்கட்டு அமைக்க விரும்பினார்.

இந்த பணிகளை மேற்கொள்ள குடியிருப்பு நிர்வாக கமிட்டியும், மாநகராட்சியும் ஒப்புதல் அளித்து இருந்தது.

மாநகராட்சி தடை

இந்தநிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் டாக்டர் டிசா என்பவர் மாநகராட்சியில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் நடிகர் அமீர்கான் வீட்டில் நடைபெற உள்ள சீரமைப்பு பணியால் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து நடிகர் அமீர்கான் வீட்டில் சீரமைப்பு பணியை தொடங்க மும்பை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கட்டிடத்துறை மூத்த அதிகாரி அசோக் வாக்டே கூறும்போது ‘‘அடுத்த அறிவிப்பு வரும் வரை பணிகளை தொடங்க வேண்டாம் என நடிகர் அமீர்கானை அறிவுறுத்தி உள்ளோம்’’ என்றார்.

மாநகராட்சியினர் நடிகர் அமீர்கான் குடியிருப்பை ஆய்வு செய்து அதன் உறுதி தன்மையை அறிந்து அதன் பிறகு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிப்பார்கள் என கூறப்படுகிறது. சமீபத்தில் சட்டவிரோத சீரமைப்பு பணியால் காட்கோபரில் கட்டிடம் இருந்து 17 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்