15-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன முன்னாள் அதிகாரி தற்கொலை

15-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன முன்னாள் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-08-05 22:30 GMT
மும்பை,

15-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன முன்னாள் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட விரக்தியில் அவர் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டார்.

மன உளைச்சல்

மும்பை பரேல் கல்பத்ரு என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தவர் பிரசாந்த் (வயது45). இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் இவர் கடந்த சில மாதங்களாக கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தான் வசித்து வந்த குடியிருப்பு கட்டிடத்தின் 15-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கே.இ.எம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கடிதம் சிக்கியது

இது குறித்து காலாசவுக்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் எனது சாவிற்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்